ஆட்சியை தக்கவைக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சி?

தற்போதைய ஆட்சியை 2025 ஒக்டோபர் மாதம்வரை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான சூழ்ச்சி இடம்பெற்றுவருகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

” 2024 ஒக்டோபருக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும், அப்படியானால் ஆகஸ்ட் மாதம் வேட்புமனு ஏற்கப்பட வேண்டும். அப்படியானால் இந்த அரசின் ஆயுள் என்பது அடுத்த மாதம் ஆகஸ்வரைதான். ஏனெனில் ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வந்த பிறகு, மறுநாள் நாடாளுமன்றமும் கலைக்கப்படும் .

நாடாளுமன்றத்தின் பதவிகாலம் 2025 ஒக்டோபர் மாதம்வரை உள்ளது. எனவே, அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் வீடு செல்வதை தடுப்பதற்காக. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு, 2025 ஒக்டோபர் வரை ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பஸில், ரணில் போன்றோர் முயற்சிக்கின்றனர்.” – எனவும் அநுர சுட்டிக்காட்டினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது நல்லது. அதற்கு ஆதரவு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் என்ன நடக்கும், இந்த அரசின் ஆயுள் ஒருவருடம் நீடிக்கும். அதற்கு இடமளிக்கலாமா? எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் நாளிலேயே, நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் கொண்டுவருவோம். அப்போதுதான் மக்கள் ஆணையுடன் அமையும் புதிய நாடாளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரம் செல்லும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இவர்கள் எல்லாம் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை பாதுகாப்பதற்காக முன்னின்று செயற்பட்டவர்கள். நிறைவேற்று ஜனாதிபதி ஜனாதிபதி முறைமையை பலப்படுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ச 18 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தார். அதன்பின்னர் அதிகாரக்குறைப்புக்காக 19 கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை பலப்படுத்துவதற்காக 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தனர்.

அடுத்த வருடம் வீடு செல்ல வேண்டிவரும் என்பதால் தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி குழம்பியுள்ளார். ஜனநாயகத்துக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் அவர் கைவைக்கவில்லை. மாறாக ஆட்சியை தக்கவைப்பதே இதன் நோக்கம். இன்னும் ஒரு வருடம் இருந்தால் கிராம மக்களை ஏமாற்றிவிடலாம் என்பதே ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் அநுர குமார சுட்டிக்காட்டினார்.