You are currently viewing பாதீடு நவம்பர் 13 இல் முன்வைப்பு!

பாதீடு நவம்பர் 13 இல் முன்வைப்பு!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி 2ஆவம் வாசிப்புமீதான விவாதம் ஆரம்பமாகும். 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

3ஆம் வாசிப்புமீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகும். டிசம்பர் 13 ஆம் திகதி பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும். 2024 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு நாடாளுமன்றத்தில் முன்வைப்பதே முதலாம் வாசிப்பாக கருதப்படும்.

நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையிலும், கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலுமே இந்த பாதீடு முன்வைக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தால் நிபந்தனைகள்கூட முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, வாக்குறுதிகளை மட்டும் வாரி வழங்காமல், நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களும், முன்மொழிவுகளும், மறுசீரமைப்புகளும் பாதீட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.