You are currently viewing 13 அடுத்தக்கட்டம் நோக்கி நகருமா?

13 அடுத்தக்கட்டம் நோக்கி நகருமா?

” அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச,

” ஒற்றையாட்சியை நிலைநாட்டுவதற்காகவே மஹிந்த ராஜபக்ச 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்தார். எனவே, 13 ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் மக்கள் ஆணையின் பிரகாரமே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்படும்.

13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசுவதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் குறித்தே கதைக்க வேண்டும். மஹிந்த ராஜபக்சவே வடக்கு, கிழக்கு மக்களுக்கு வாக்களிக்கும் நிலைமையை ஏற்படுத்திக்கொடுத்தார். வடக்கு, கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினார்.

மஹிந்த ராஜபக்ச பதவிக்கு வருவதற்கு முன்னர், 13 அமுலில் இருந்தாலும் மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. அவரே மக்கள் பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். தற்போது அவர் பதவியில் இல்லை. மாகாசபையிலும் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, 13 பற்றி கதைக்க வேண்டுமானால் முதலில் தேர்தலை நடத்துவது பற்றி பேசப்பட வேண்டும்.” – என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அறிவிப்பு

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும், அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) மாலை நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு – கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தனக்கு மாத்திரமன்றி இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என்றும் புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டுக்காக இந்த யோசனைகளை முன்வைப்பது மாத்திரமே தனது கடமை என்றும், இதனை நாடாளுமன்றமே நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு மட்டும் வைத்துக்கொண்டு இதனைச் செய்ய முடியாது என்றும், இந்தப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் மாகாண சபை முறைமையைத் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்த்தால், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

முதல் பட்டியலில் உள்ள, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பல விடயங்கள் மத்திய அரசின் கீழ் இருப்பதாகவும், எனவே அந்த அதிகாரங்களைப் போன்றே விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் கீழ்மட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டுக்கான கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் எனவும், அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உரிய முறையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை மாகாண சபை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர்கள் பதவியை வகித்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தப் பதவியை வகித்தவாறே மாகாண சபை உறுப்பினராகச் செயற்படுவது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

கூட்டமைப்பு நிலைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், சர்வக்கட்சி மாநாடு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு,

“ஜனாதிபதி எங்களை இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யச் சொல்கின்றார். ஒன்று மாகாண சபைத் தேர்தலை நடத்த இணங்க வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் குறித்து பேச வேண்டும் என்று அவர் கூறுகின்றார்.

இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாது என்பதுதான் அவரின் நிலைப்பாடாக இருக்கின்றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமாயின் அதன் அதிகாரங்கள் குறித்து ஏன் கலந்துரையாட முடியாது என்று எங்களுக்குப் புரியவில்லை.

எனவே, குறித்த மாநாட்டை நிறுத்துவதற்கு நாங்கள் முடிவு செய்தோம். மாநாட்டின் ஊடாக எந்தப் பிரதிபலனும் கிடைக்கவில்லை.

நாங்கள் சந்தேகத்துடன் வந்தது போன்றே இங்கு இடம்பெற்றது.

தேர்தல் குறித்து கதைக்கும் போது ஜனாதிபதி அச்சத்துடனேயே இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.

இன்றைய கலந்துரையாடல் முற்றிலும் அதிருப்தியாகவே அமைந்தது.” – என்றார்.

Leave a Reply