உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும், இச்செயன்முறைக்கு மேற்படி அமைப்புகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைவு தொடர்பில் தமிழர் தரப்பில் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. சர்வதேச பொறிமுறைக்கு ஒத்தாகவே அது அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுவருகின்றன.
ஜனாதிபதிக்கும் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் விரிவாகவும், ஆழமாகவும் கலந்துரையாடப்படவில்லை. எனினும், உத்தேச திட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது.
எனினும், இச்சட்டவரைபு குறித்து கனடா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றுடன் நிகழ்நிலை முறைமையில் கலந்துரையாடல்களை நடத்தினோம். அவர்கள் இச்செயன்முறைக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபு குறித்து வெகுவிரைவில் பொதுமக்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என்றும், அச்சட்டவரைபு தொடர்பில் அபிப்பிராயம் கோரப்படும் என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.