அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படும்.
அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மட்டும இடம்பெறும். அவ்வுரையின்போதே 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட அதிகாரப்பகிர்வு சம்பந்தமாகவும் ஜனாதிபதி கருத்து வெளியிடவுள்ளார்.
சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதியின் உரை அமையும் என தெரியவருகின்றது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது தனது கடப்பாடாகும் என ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். அரசமைப்பில் உள்ள விடயத்தை தன்னால் மீற முடியாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு சிங்கள தேசியவாத அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் ஆற்றப்படும் அக்கிராசன உரையில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக நாட்டில் அமுல்படுத்த தீர்மானித்திருக்கும் புதிய கொள்கைகள், புதிய சட்டங்கள், 2023-2048 வரையான காலப்பகுதிக்குள் சுதந்திர தினத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு நாட்டின் முன்னேற்றத்திற்காக கட்சி, நிறம், இனம்,மத பேதமின்றி கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படும்.
