You are currently viewing ஓராண்டுக்குள் அரசியல் தீர்வு -ஜனாதிபதி உறுதி

ஓராண்டுக்குள் அரசியல் தீர்வு -ஜனாதிபதி உறுதி

“தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் தற்போது நாட்டின் தலைவர். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தட்டிக்கழிக்க முடியாது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டே ஆக வேண்டும்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களும் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன்.

இதற்கேற்றவாறு புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். அது விரைந்து நிறைவேற்றப்படும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்.

தமிழ் மக்களுக்கு மீள்குடியேற்றப் பிரச்சினை, காணிப் பிரச்சினை, காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, அரசியல் தீர்வுப் பிரச்சினை எனப் பல பிரச்சினைகள் உண்டு.

எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அந்தப் பணியைத் தற்போது ஆரம்பித்துள்ளேன். அதன் ஒரு கட்டமாக தண்டனை பெற்று சிறையில் இருந்த அரசியல் கைதிகள் சிலருக்குப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளேன். என்னால் இயன்ற காரியங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்.

அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். இது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியும் வருகின்றேன்” – என்றார்.

Leave a Reply