You are currently viewing தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் எதற்கு? ஆளுந்தரப்பில் விளக்கம்

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் எதற்கு? ஆளுந்தரப்பில் விளக்கம்

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,  தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவதாக இந்த சட்டத்தை நிறைவேற்றிய நாடு என்ற பெருமை எமக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தமது சேவைகளை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

” தரவு அதிகாரசபை தொடர்பிலும் அதன் தகுதி, தகைமை தொடர்பிலும் சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சுமந்திரனும் சில கருத்துக்களை முன்வைத்தார். உண்மையில் கடந்த அரசாங்கத்தில் நீங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டம் கூட கொண்டுவரப்பட்டிருக்காது.

ஊடகவியலாளர்களின் உரிமை தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டு மக்களின் உரிமை, மக்களுக்கான கருத்து சுதந்திரம் என்பது எல்லாம் ஒன்றுதான். ஊடகத்திற்கு என தனியான சுதந்திரம் கிடையாது, ஊடகவியலாளர்கள் சரியானதை தெரிவிக்க வேண்டும்.தேவையில்லாதவற்றுக்கு மட்டுப்படுத்தல்கள் மிக அவசியமானது. அனைத்திற்கும் சுதந்திரத்தை வழங்க முடியாது.” – என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலா – நாமல் விளக்கம்

அதேவேளை, இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ச,

அனைத்து அரச துறைகளையும் கணனி மயப்படுத்தவும் பிரஜைகள் சேவைகள் கணினி மயப்படுத்தவும் நோக்காகக் கொண்டே தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படுகிறது.

உலகில் அநேக நாடுகளில் அரச பொறிமுறை கணினி மயப்படுத்தப்படாததால் குறைபாடுகள் ஏற்பட்டன. டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை முன்னெடுக்க 30 மாத திட்டம் தயாரிக்கப்பட்டது. அதில் சட்ட குறைபாடுகள் உள்ளன. அவற்றை சீர் செய்யாது இதனை முன்னெடுக்க முடியாது. தரவு தொடர்பில் உலக அளவில் பேசப்படுகிறது.

 எமது நாட்டின் எதிர்காலத்திற்காக இதனை பயன்படுத்த வேண்டும்.தரவுகளை பாதுகாக்க தேவையான சட்ட பின்னணி ஏற்படுத்த வேண்டும். வங்கிகளுக்கோ தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கோ தரவுகளை வழங்கினால் எவ்வாறு அவை பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான பாதுகாப்பே இந்த சட்டமூலத்தினூடாக வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் மயமாக்கலுக்கு இவ்வாறான சட்டமூலங்கள் அவசியமானவை. டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடப்படுகிறது.

விரைவில் அதனை கொண்டு வருவோம். பிரஜைகள் சேவைகள் வழங்கும் மேடையாக இந்த மாற்றங்கள் அமையும்.

அனைத்து பிரஜைகளும் தமது விபரங்களை கிராம சேவகர்களுக்கு வழங்குகிறோம். அந்த தரவுகளுக்கு என்ன நடக்கிறது? அது பற்றி யாருக்கும் தெளிவு கிடையாது. நீதிமன்றம் சென்று வழக்கு தொடரவும் முடியாது. இதற்கு டிஜிட்டல் மயமாக்கலே ஒரே தீர்வு.

பிரதேச சபைகள் உள்ளுராட்சி நிறுவனங்களிலும் டிஜிட்டல் மயமாக்கல் மேற்கொள்ள இருக்கிறோம். கடவுச்சீட்டு,அடையாள அட்டை ,கிராம சேவகர் அறிக்கை,பொலிஸ் அறிக்கை பெற வரிசையில் இருக்கும் நிலை மாற்றப்படும். வெளிநாடு செல்வதற்கு பல இடங்களுக்கு சென்று பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.இதனை சில மணி நேரங்களில் விரல்களை தட்டி மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட வேண்டும்.

இந்த சட்டம் தகவல் அறியும் சட்டத்தை மீறிச் செல்லாது.அத்தோடு ஊடகவியலாளர்களின் உரிமைகளை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் அமையாதென்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம்.

18-, 20 மாதங்களில் பின்னர் தரவு செயற்பாட்டு நிறுவனத்தின் ஊடாக தேவையான ஒழுங்குமுறைகள் முன்வைக்கப்படும். மக்களின் கருத்து பெற்றப்பட்ட பின்னர் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னரே இந்த நிறுவனம் செயற்படும். இதற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார். அதற்கான தகைமைகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின் கீழ் மக்களின் தனித்துவம் பேணப்படும். தரவுகளை யார் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது தரவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பொறுப்பு கூறுவதாக இருந்தால் எந்தச் சட்டம் வந்தாலும் பிரச்சினை கிடையாது. அநேகமான ஊடகவியலாளர்கள் நேர்மையாக செயற்படுகிறார்கள் என்றார்.