நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் நபர்களின் பின்னணியில் செயற்படுபவர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று
கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
அத்துடன், இன, மத முரண்பாடுகளை தோற்றுவித்து, அதன்மூலம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சி இடம்பெறக்கூடும் எனவும் அருட் தந்தை சந்தேகம் வெளியிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மத நம்பிக்கை மற்றும் மத தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல நபர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட நபர்களில் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊடகங்கள் மூலம் அறியமுடிகின்றது.
மத நம்பிக்கை மற்றும் மத தலைவர்களை அவமதிக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். மாறாக மதங்களை அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இனவாதம் மற்றும் மதவாத முரண்பாடுகளை தோற்றுவித்து, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டு, அதன்மூலம் அதிகாரத்தை வெல்வதற்கு முற்படும் சில அரசியல் வாதிகள், அவ்வாறான சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்காக நபர்கள், ஊடகங்கள், சமூக ஊடகங்களை திட்டமிட்ட அடிப்படையில் கடந்த காலங்களிலும் பயன்படுத்தி வந்தனர். எனவே, தற்போது எழுந்துள்ள மத முரண்பாடுகூட இவ்வாறான சூழ்ச்சியின் ஒரு அங்கமாக இருக்ககூடும்.
இதன்மூலம் இறுதியில் அதிகாரத்தை வெல்லும் அரசியல்வாதிகள் செல்வங்களை குவித்துக்கொண்டு, சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். மோதிக்கொள்ளும் சாதாரண மக்களும், நாடும்தான் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.
எனவே, பௌத்த மதம் உள்ளிட்ட இந்நாட்டில் உள்ள மதங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி, உண்மை கண்டறியப்பட வேண்டும். பொலிஸ் மற்றும் சிஐடியினருக்கு இதற்கான பொறுப்பு உள்ளது. ” – என்றார்.