இலங்கை அரசு, தமிழ் சமூகத்தின் கவலைகள்

திரை மறைவாக, வாரக் கணக்கில் நடந்த ராஜாங்க ரீதியிலான ஆதரவு திரட்டல் நடவடிக்கைகளுக்கு பின்பும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக முடிந்துள்ளது

2009ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதலின் போது நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பானவர்களை பொறுப்பேற்க வைப்பதற்கு ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவருக்கு இந்த தீர்மானம் கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் திரட்டப்படும் ஆதாரங்களும் எதிர்காலத்தில் தண்டனை வழங்குவதற்காக பயன்படுத்தப்படலாம்.

போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவ மற்றும் குடிமை அதிகாரிகளுக்கு எதிர்காலங்களில் பயணம் மற்றும் பிற தடைகள் விதிக்கப்படலாம் என்று இலங்கை அரசு கவலைப்படுகிறது.

தொடர்புடைய நாட்டின் ஒப்புதல் இல்லாமல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று இலங்கை அரசு தொடர்ந்து வாதிட்டு வந்தது.

ஆனால் ஐநாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை மீதான மீது கடுமையான தடைகளை விதிக்கப் போதுமானதாக இல்லை என்று தமிழ் சமூகத்தை சேர்ந்த சில தலைவர்கள் கருதுகிறார்கள்.

போர்க் காலத்தின் போது காணாமல் போன தங்களது உறவினர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான அவர்களது காத்திருப்பு இன்னும் தொடர்கிறது.

ஆயிரக் கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் பொறுப்பாக்கப்படவேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தீர்மானம் திருப்தி அளிக்காமல் போகலாம்.

ஆனால் இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்ததாக குற்றம் சாட்டப்படும் உரிமை மீறல்கள் மறக்கப்படவோ, கண்டுகொள்ளாப்படாமல் போகவோ செய்யாது என்று இந்தத் தீர்மானம் மூலம் சர்வதேச சமூகம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

Leave a Reply