You are currently viewing மாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி

மாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை பயங்கரமானதாகும். பாதீட்டில் உள்ள இந்த முன்மொழிவுக்கு உடன்பட முடியாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பாதீட்டில் உள்ள முன்மொழிவுகளுள் என்னால் உடன்பட முடியாத சில விடயங்களும் உள்ளன. குறிப்பாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி தமக்கு தேவையான வகையில் மாகாணசபைகள் பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்குவது பாரதூரமான – பயங்கரமான விடயமாகும். 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விடயதானத்துக்குள் பல்கலைக்கழகம் பற்றி குறிப்பிடப்படவில்லை.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

” புதிய ஏற்பாட்டின் பிரகாரம் கிழக்கு மாகாணம் நினைத்தால், மத்திய கிழக்கின் உதவியுடன் சரியா கற்பிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கலாம். அதேபோல கனடாவில் பாடசாலையொன்றில் இனப்படுகொலை தொடர்பான திட்டம் உள்வாங்கப்பட்டதுபோல வடக்கில் பல்கலைக்கழகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் மூளைச்சலவை செய்யப்படலாம். நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையிலேயே பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ” ” – எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.