You are currently viewing ஐசிசிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது இலங்கை!

ஐசிசிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது இலங்கை!

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை நீக்கப்பட்டதன் பின்னணியில் அழுத்தம் உள்ளது எனவும், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளோம் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று இரவு (11) அறிவித்தது.

கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகள் சுயாதீனமாக நிர்வகிக்கப்படாமை, அதன் நிர்வாக செயற்பாடுகளில் அரசின் தலையீடுகள் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஐசிசி விளக்கம் அளித்திருந்தது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர், இம்முடிவு குறித்து ஐசிசி தமக்கு அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை எனவும், முன்னறிவித்தல், விளக்கம் இன்றியே நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டினார்.

” ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் ஊழல்மிகு அதிகாரிகளின் தலையீட்டுடன்தான், இலங்கை உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் சபை இடைநிறுத்தியுள்ளது என கூறுவதே பொருத்தமாக இருக்கும்.முதலில் விளையாட்டுத்துறை அமைச்சால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக்குழுவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்குவதற்கு முற்படுவோம். திங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்பின்னர் ஐசிசி விவகாரம் கருத்திற்கொள்ளப்படும். எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி ஆராய வேண்டும். ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையால் ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தம் இருப்பதாக நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஐசிசி குழு இங்கு வந்து பேச்சு நடத்தியது. நாமும் தெளிவுபடுத்தினோம். பின்னர் அரசியல் தலையீடு இல்லை ,இணைந்து பயணிக்கவும் என ஐசிசி கடிதம் அனுப்பியது எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரி – 20 தொடர்பில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு நான் நடவடிக்கை எடுத்தேன். ஐசிசிக்கும் கடிதம் எழுதப்பட்டது. இதற்கு பதில் வரவில்லை. மாறாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் அழுத்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியிடம் விளக்கம் கோரப்படும். எமது தரப்பு கருத்துகள் முன்வைக்கப்பட்டு மேன்முறையீடு செய்யப்படும். அங்கு நீதி கிடைக்காவிட்டால் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம். தேசத்துரோகிகள் நாட்டைக்காட்டிக்கொடுத்துள்ளனர் எனவும் அமைச்சர் சீற்றம் வெளியிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். இதற்கு எதிராக கிரிக்கெட் சபையினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தைநாடி இடைக்கால தடை உத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.