” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் நாளில் நாடாளுமன்றமும் கலைக்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்படுமானால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” – என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
” இன்னும் இரு வருடங்களுக்கு தேர்தல் நடத்தப்படாது என்ற கருத்து சமூகத்தில் உருவாக்கப்பட்டுவருகின்றது. உள்ளாட்சிசபைத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன ஒத்திவைக்கப்பட்டதுபோல் ஜனாதிபதி தேர்தலும் பிற்போடப்படலாம் என சிலர் நினைக்கின்றனர். இதற்கு சாத்தியமில்லை. ஜனாதிபதி தேர்தல் கட்டாயம் நடத்தப்பட்டாக வேண்டும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கான காரணங்களையும் அவர் விவரித்துள்ளார்.
” உள்ளாட்சிசபைகள் மற்றும் மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதபோதிலும் அவற்றை நிர்வகிப்பதற்கு அரசமைப்பில் ஏற்பாடு உள்ளது. விசேட ஆணையாளர் ஊடாக உள்ளாட்சி சபைகளைம், ஆளுநர் ஊடாக மாகாணசபைகளையும் நிர்வகிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் விவகாரத்தில் இந்த அணுகுமுறை பொருந்தாது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிகாலம் நீடிக்கப்பட வேண்டுமானால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அந்த சர்வஜன வாக்கெடுப்புகூட தேர்தல்தான். எனவே, அந்த யோசனை வந்தால் மக்கள் ஆதரவுடன் தோற்கடித்து விடலாம்.” எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி பதவியை ஒரு நிமிடமாவது வெற்றிடமாக வைக்க முடியாது. சிலவேளை ஜனாதிபதி பதவியை வகிப்பவர் இறந்தால்கூட பிரதமர் அந்த இடத்துக்கு வந்துவிடுவார். அதன்பின்னரே நாடாளுமன்றம் ஊடாக தேர்வு நடக்கும்.
ஜனாதிபதியின் பதவிகாலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதியின் பதவிகாலம் அடுத்த வருடம் நவம்பரில் முடிவடைகின்றது. அப்படியானால் ஒக்டோபருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சிலவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து தேர்தலை நடத்தாமல் இருக்ககூடும். அதனை செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் அவசியம். அதேபோல சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். அவ்வாறு ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு மக்கள் ஆணையற்ற, ஊழல் மோசடியில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் உள்ள தற்போதைய நாடாளுமன்றத்துக்கு அதன் அதிகாரத்தை வழங்க முடியாது. எனவே, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் நாளிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஜனாதிபதி முறைமை ஒழிப்பு யோசனையையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் இடித்துரைத்துள்ளார்.