You are currently viewing 2024 இல் மக்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமா அரசு?

2024 இல் மக்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமா அரசு?

” 2024 இல் மக்கள் நீதிமன்றம் முன்னிலையில் அரசு கட்டாயம் முன்னிலையாக வேண்டும். தம்மை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும், நாடாளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றார் என எதிரணிகளும், சிவில் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

தேர்தலை ஒத்திவைத்தும், இழுத்தடித்தும், தமக்கு சாதகமான முறையில் தேர்தல் முறைமையை மாற்றியும் ஆட்சியை தக்கவைப்பதற்கான நிகழ்ச்சி நிரலே இதன் பின்னணியில் உள்ளது எனவும் மேற்படி தரப்புகள் குற்றஞ்சாட்டிவரும் பின்புலத்திலேயே மொட்டு கட்சியின் மூத்த உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

” 2024 தேர்தல் வருடம். தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் 2024 நவம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றிருக்க வேண்டும். அந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயார்.” – எனவும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

” உள்ளாட்சிசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனித உரிமை மீறப்படுகின்றது. அத்தேர்தலும் நடத்தப்படாக வேண்டும்.

நல்லாட்சிகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அதாவது நடுக்கடலில் கல்லில் கட்டிபோட்டதுபோல் மாயமாகி இருக்கும் மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். தம்மை யார் ஆள வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை எடுக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

யார் ஜனாதிபதி ஆக வேண்டும், அரசை யார் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மக்களின் ஜனநாயக உரிமை உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். அந்தவகையில் அடுத்தவரும் கட்டாயம் மக்கள் நீதிமன்றம் முன்னிலையில் அரசு ஆஜராகுவதே ஏற்புடைய நடவடிக்கை.” – எனவும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

ரோஹித அபேகுணவர்தனவின் கருத்தின் பிரகாரம் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்காது என்பது தெரிகின்றது. மொட்டு கட்சியின் ஆதரவு இன்றி அரசால் சட்டமூலங்களை நிறைவேற்றமும் முடியாது. மாற்றங்களை செய்யயும் முடியாது.