You are currently viewing பொலிஸ்மா அதிபருக்கான சேவை நீடிப்பு சட்டப்பூர்வமானதா?

பொலிஸ்மா அதிபருக்கான சேவை நீடிப்பு சட்டப்பூர்வமானதா?

பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்கு அரசமைப்பு பேரவை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதற்கான நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சபையில் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டன.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் சபாநாயகர் ஆலோசனைபெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டின.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30. மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க முதலில் கேள்வி எழுப்பினார்.

“ தற்போதுள்ள பொலிஸ்மா அதிபரின் பதவிகாலம் ஒக்டோபர் 9 ஆம் திகதி முடிடைந்தது. இதற்கு முன்னரும் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்ட, ரீலோட்போல இது நடந்துவருகின்றது. எனினும், பொலிஸ்மா அதிபருக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்கு அரசமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை. அப்படியானால் எமது நாட்டு பொலிஸ்மா அதிபர் யார்? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எந்த பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு வழங்குவது? அரசமைப்பு பேரவை நியமித்தாலும் ஜனாதிபதிக்கு நியமிக்க முடியும் என்றால் அரசமைப்பு பேரவை எதற்கு” – என்றார் அநுர.

இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, “ தற்போதுள்ள பொலிஸ்மா அதிபரை இம்மாதம் இறுதிவரை அப்பணியில் தொடர தனக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,

“ ஜனாதிபதியிக்கு நியமனம் வழங்க முடியாது, அரசமைப்பு பேரவைக்கு பரிந்துரையை முன்வைக்க வேண்டும், இந்த பரிந்துரைக்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே நியமனம் வழங்க முடியும் என அரசமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனினும், தற்போது நியமனம் வழங்கப்பட்ட பின்னர் அரசமைப்பு பேரவையின் அனுமதியை பெறும் புதிய கலாச்சாரம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில் இவ்விடயம் தொடர்பில் நீங்கள் (சபாநாயகர்) சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற வேண்டும்.” – என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

“ நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது, அதேபோல அனுமதி வழங்கவோ, நிராகரிக்கவோ அரசமைப்பு பேரவைக்கு அதிகாரம் உள்ளது. அரசமைப்பு பேரவை இவ்வாறு அனுமதி வழங்கினாலும் நியமிக்கவோ அல்லது நியமிக்காமல் இருப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு உள்ளது.” – என்று குறிப்பிட்டார்.

அதிகாரம் இல்லை

” பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கோ நீக்குவதற்கோ அரசமைப்பு பேரவைக்கு அதிகாரம் கிடையாது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி சீனா சென்றுள்ளார், பொலிஸ்துறைசார் அமைச்சரும் நாட்டில் இருக்கவில்லை. பரிந்துரைக்கும் அதிகாரமே அரசமைப்பு பேரவைக்கு இருக்கின்றது, நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. நீக்கும் அதிகாரம் ஜனாதிபதி, நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அந்தவகையில் ஜனாதிபதியும், பொலிஸ்துறை அமைச்சரும் நாட்டில் இல்லாதவேளை பொலிஸ்மா அதிபருக்கு 3 வாரங்களுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டமை சட்டப்பூர்வமான செயற்பாடாகும்” -என்றார்.

அதேவேளை, புதிய பொலிஸ்மா அதிபர் இம்மாதம் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.