உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ‘சனல் 4’ காணொளியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இதன்படி மேற்படி தெரிவுக்குழுவின் தலைவரை பெயரிடுவதற்கான அதிகாரம் எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், தெரிவுக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆளுங்கட்சி மற்றும் எதிரணிக்கு சமமாக இருக்க வேண்டும் என்பனவே அவையாகும்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது “ உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிாித்தானிய “சனல் 4” அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்தற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு” யோசனையை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மேஜர் பிரதீப் உந்துகொட முன்வைத்தார்.
மஹிந்த ராஜபக்ச, வஜிர அபேவர்தன உட்பட ஆளுங்கட்சி எம்.பிக்கள் பலர் அந்த யோசனையில் கையொப்பமிட்டுள்ளனர். இந்த யோசனையின் பிரகாரம் தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களை சபாநாயகர் பெயரிட வேண்டும், அதில் இருந்து தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த தெரிவுக்குழு யோசனை தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் நம்பிக்கை இல்லை என சுட்டிக்காட்டி மூன்று யோசனைகளை முன்வைத்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்க திருச்சபையும் இதே யோசனைகளை முன்வைத்துள்ளது.
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சர்வதேச சுயாதீன விசாரணைக் குழுவின் மேற்பார்வையில் இடம்பெற வேண்டும்.
- இந்த விசாரணை குழுவுக்காக நியமிக்கப்படும் உள்நாட்டு உறுப்பினர்களில், பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சி ஐ டி அதிகாரிகளை உள்ளீர்க்கப்பட வேண்டும்.
- குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தப்படும்வரை இடைநிறுத்தப்பட வேண்டும். “ – என்றார்.
அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஏற்புடையதாக அமைய வேண்டும் எனில் – அதேபோல எமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைய வேண்டுமெனில் கீழ்வரும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரை பெயரிடுவதற்கான பொறுப்பு எமக்கு (பிரதான எதிர்க்கட்சிக்கு) வழங்கப்பட வேண்டும், அமெரிக்காவில் நடத்தப்பட்ட 9/11 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் சமமாக ஆளும், எதிரணி உறுப்பினர்கள் (தலா 5 பேர் வீதம்) இடம்பெற்றிருந்தனர். இந்த கட்டமைப்பில் தெரிவுக்குழு அமைய வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் தெரிவுக்குழுவில் இணைய முடியாது – எனவும் எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு விடுத்தார்.