You are currently viewing இலங்கையின் புதிய இரு சட்டமூலங்கள் குறித்து மனித உரிமை பேரவை கடும் கவலை

இலங்கையின் புதிய இரு சட்டமூலங்கள் குறித்து மனித உரிமை பேரவை கடும் கவலை

இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருக்கும் இரண்டு சட்டமூலங்கள், சர்வதேச நியமங்களின் அடிப்படையில் அமையவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரவிணா ஷம்தாசனி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அச்சத்தையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

“இலங்கை நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருக்கும் இரண்டு சட்டமூலங்கள்,
அதாவது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு பதிலாக திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் மற்றும் இணையதள பாதுகாப்பு-அதிகாரிகளுக்கு பரந்துபட்டளவில் மிகவும் கூடிய அதிகாரங்களை வழங்கும் நிகல்நிலை காப்பு சட்டமூலம் என்பன அச்சுறுத்தலானவை. மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு முரணாக, மனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் வகையில் அமைந்துள்ளன.

பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலமானது, கடும் சர்ச்சைக்கு உள்ளான – சிறுபான்மையினர் மீது ஒரு ஒடுக்குமுறைக்கான ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலமாகும்.

மேலும் அந்த சட்டம் ஒப்பீட்டளவில் அதிகமாக சிறுபான்மையினருக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டம் ஐ.நா மனித உரிமைகள் வழிமுறைகளுக்கு அமைவாக இல்லை என்கிற கவலை நீண்டகாலமாக இருந்துள்ளது என்று ஷம்தாசனியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

” புதிய சட்டமூலத்தில் மரண தண்டனையை ஒழிப்பது என்பது போன்ற சில ஏற்பாடுகள் இருந்தாலும், பாரபட்சங்கள் தொடர்பில் சில கவலைகள் இன்னும் உள்ளன.

கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடல் உரிமைகள் ஆகியவை தொடர்பில் விதிக்கப்படும் தடைகள் அதற்கான தேவை மற்றும் விகிதாசாரத்தின் அடிப்படையை எட்ட தவறிவிட்டது.

இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்பதற்கு வெளிப்படையாகவே மிகைப்படுத்தபப்ட்ட விளக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் எவ்விதமான சட்ட மேற்பார்வையுமின்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்குக்கு-தடுத்து நிறுத்த, விசாரிக்க, சோதனையிட மற்றும் மக்களை தடுத்துவைக்க, கைது செய்ய மிகவும் பரந்துபட்ட அதிகாரங்கள் உள்ளன.

ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது, தடை உத்தரவுகளை பிறப்பிப்பது மற்றும் இடங்களை தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பது போன்ற பிரச்சினைகளும் உள்ளன. இவை அனைத்தும் போதுமான பொறிமுறைகள் இன்றி அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் அளிப்பதும் கவலைகளை ஏற்படுத்துகின்றனர்.” – என்றும் அந்த அறிக்கையில் சர்ச்சைக்குரிய விடயங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன .

இணையதள பாதுகாப்பு சட்டமூலத்தை பொறுத்தவரையில், அது இணையத்தில் தொடர்பாடல்களை கடுமையாக கட்டுப்படுத்தும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் நம்புகிறது. அதில் பொதுமக்கள் கூறும் விடயங்களை “போலி வாக்குமூலங்கள்” என முத்திரைகுத்தி அதிகாரிகள் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடியதும் அடங்கும்.

இந்த சட்டவரைபில் தெளிவில்லாத பல பகுதிகள் காணப்படுவதாகவும், குற்றங்களுக்கான சில விளக்கங்கள் தன்னிச்சையான மற்றும் தாம் விரும்பியபடி வியாக்கியானம் அளிப்பதற்கு கணிசமானளவிற்கு இடம் கொடுக்கிறது எனவும், அது அனைத்து வகையான நியாயமான கருத்து வெளிப்பாடுகளையும் குற்றமயமாக்கும் சாத்தியங்களை ஏற்படுத்தி, கருத்துச் சுதந்திரத்தின் மீது குரல்வளையை நெறிக்கும் அளவிற்கு இறுக்கமான பிடியை மேற்கொள்வதற்கான மோசமான சூழலை ஏற்படுத்தக்கூடும் எனவும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கை அரசு மேலும் அர்த்தமுள்ள வகையில் சிவில் சமூகம், மற்றும் ஐ.நாவின் சுயாதீன நிபுணர்கள் ஆகியோருடன் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அந்த சட்டவரைவுகளில் கணிசமான திருத்தங்களை மேற்கொண்டு, சர்வதேச மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு உள்ள கடப்பாடுகளை முழுமையாக ஏற்று நடக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.