” தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.” – என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதம் ஆரம்பமானது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவால் இப்பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இவ்விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம்,
” ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துகள், சிங்கள மக்கள் மத்தியில் அனுதாப ஓட்டுகளை இலக்கு வைத்ததாகும்.
ரணில் விக்கிரமசிங்கவை சிறுபான்மையின மக்கள் வேறு கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். ஆனால் அவரும் ராஜபக்சக்களின் வழியில்தான் பயணிக்கின்றார்.
சிறுபான்மையின மக்களின் ஆதரவு தேவையில்லை என்ற தொனியில் செயற்பட்டு, சிங்கள வாக்குகளை குறிவைக்கின்றார். ” – என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,
” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இனத்தின் வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படும் நபர் அல்லர். பிரச்சினைக்கு (இனப்பிரச்சினை) அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.
எனவே, மேற்படி நேர்காணலை அடிப்படையாகக்கொண்டு சிங்கள வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து வெற்றிபெறுவதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார் எனக் கூறுவது தவறாகும்.” – என்றார்.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மன் டி.டபிள்யூ. ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் இலங்கையில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.