You are currently viewing பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடிவு…

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடிவு…

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேற்படி சட்டமூலங்களை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – என்று முன்னாள் அமைச்சரான சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

” இந்த அரசு தேர்தலுக்கு அஞ்சுகின்றது. அதனால்தான் உள்ளாட்சிமன்ற தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்களையும் இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பணம்தான் வீணடிக்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டும் ஊடகங்களை ஒடுக்குவதற்கான முயற்சியும் இடம்பெறுகின்றது.

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன மனித உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவே சரி எது, பிழை எது என்பதை தீர்மானிக்கும். இதன்மூலம் அரசுக்கு எதிராக எவராவது கருத்து வெளியிட்டால், அது போலி தகவல் எனக் குறிப்பிட்டு, நடவடிக்கை எடுக்கப்படலாம்.

எமது நாட்டு ஊடகங்களுக்கு மட்டுமல்ல ‘ஒன்லைன்’ சேவையை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் உத்தேச சட்டங்களின் பிரகாரம் தாக்கம் ஏற்படக்கூடும். ஆனால் மேற்படி சட்டமூலங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் அடிபணியும் என நாம் நினைக்கவில்லை. பாகிஸ்தானில் இதேபோன்ற நகர்வு முன்னெடுக்கப்பட்டபோது, தமது பணிகளை முன்னெடுக்க சுதந்திரம் இல்லையேல், வெளியேறுவோம் என அந்நிறுவனங்கள் அறிவித்தன. இலங்கை என்பது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிறிய சந்தை. அந்நிறுவனங்கள் வெளியேறினால் என்ன நடக்கும்? வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்க்கும் அரசு இப்படியான நகர்வுகளை செய்யலாமா?” – எனவும் பீரஸ் குறிப்பிட்டார்.

அதேவேளை, மேற்படி 2 சட்டமூலங்களும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டவாக்கத்தை அதிகளவில் பாதிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தம்மிடமோ அல்லது துறைசார்ந்த எந்த தரப்பிடமோ கருத்துகளை வினவாமல் இந்த சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமூலங்களை அறிமுகம் செய்ய முன்னர், குறித்த தரப்பினருடன் கலந்துரையாடுவது மிகவும் முக்கியமானதெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.