மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் யோசனை முன்வைத்துள்ளது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி (UPP).
எனினும், ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கலுக்கு தமது கட்சி முழு ஆதரவும் வழங்கும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சர்வக்கட்சி மாநாட்டை நடத்தியிருந்தார். அதன்பின்னர் மேற்படி விவகாரங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், ஆலோசனைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் கோரியிருந்தார்.
இதற்கமைய ஐக்கிய மக்கள் கட்சியால் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
” மத்திய அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே இடைநிலைக் கட்டமைப்பாக ‘மாவட்ட சபை’ முறை மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
நியாயமான அதிகாரப் பகிர்வைக் கொண்ட ஐக்கிய நாட்டை உருவாக்குவதற்கு, மாவட்ட சபைகளை நிறுவி, உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதன் அடிப்படையில் புதிய மக்கள் நட்பு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.”
வடக்கு கிழக்கு பிரதேசங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு மாகாண சபை முறைமை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், பிராந்திய அபிவிருத்திக்கான மாகாண அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குவது என்பது அடையப்படும் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு நோக்கமாகும். ஆனால் இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் மாகாண சபை முறைமை வெற்றியடையவில்லை. எனவேதான் காலாவதியான, பயனற்ற கருத்தாக மாறியுள்ள மாகாணசபை முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எமது கட்சி உள்ளது.” எனவும் மக்கள் கட்சியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.