You are currently viewing 13 ஐ முழுமையாக அமுலாக்குவதே நிரந்தர தீர்வு!

13 ஐ முழுமையாக அமுலாக்குவதே நிரந்தர தீர்வு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வாக அமையும் – என்று பாஜகவின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ‘ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்’ அரங்கத்தில் பிரிட்டன் தமிழ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அண்ணாமலை இவ்வாறு கூறினார். 

” இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை. 1987 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இது வரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை.” – எனவும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

2009-ம் ஆண்டு, வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது.  அதற்கு முக்கியப் பொறுப்பு, அன்றைய காங்கிரஸ் (இந்தியா) அரசு. தனது கடமைகளில் இருந்தும், இலங்கைப் போரைத் தடுக்க வேண்டிய பொறுப்புகளில் இருந்தும் தவறியது காங்கிரஸ் கட்சி செய்த மன்னிக்க முடியாத தவறு.

 2014-ம் ஆண்டுக்குப் பிறகே, பிரதமர் மோடி, இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கினார். இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை பிரதமர் மோடி மனமார உணர்ந்திருந்தார். கடந்த 9 ஆண்டுகளில், இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு செய்துள்ள பணிகள் ஏராளம்.” – எனவும் தமிழக பாஜக தலைவர் குறிப்பிட்டார்.

” இலங்கையின் வடகிழக்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில், இந்திய அரசு தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரெயில் போக்குவரத்து அமைத்து கொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான அரசு. காரைக்கால் காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்க இருக்கிறது.  

உலகளாவிய அரசியல் மற்றும் சீனா அரசு, இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகள், கடன் உதவி உள்ளிட்டவை, இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தாமதப்படுத்தலாம். இலங்கை, உலக நாடுகளின் அதிகாரப் போட்டியில் பலியாகி விடக்கூடாது என்பதிலும் இந்திய பிரதமர் மிகவும் கவனமாக இருக்கிறார்.” – எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.