You are currently viewing வடக்கு, கிழக்கு தொல்லியல் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு – யோசனை முன்வைப்பு

வடக்கு, கிழக்கு தொல்லியல் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு – யோசனை முன்வைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் தொல்பொருள் அழிப்பு நடவடிக்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை  கடிதம் ஜுன் 19 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.

குருந்தூர் விவகாரை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் கூறிய விடயங்கள் அப்பட்டமான பொய்யாகும். எதிர்வரும் 21 ஆம் திகதி பிரிதுரு ஹெல உறுமய குழுவினர் குருந்தூர் விகாரைக்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்வார்கள். அதன்போது கூட்டமைப்பு எம்.பிக்களின் பொய் அம்பலப்படுத்தப்படும்.” – எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

தெரிவுக்குழு அமைக்க கோரும் யோசனையில் சில எம்.பிக்கள் இதுவரை கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அதேவேளை, தொல்பொருள் நடவடிக்கைகளுக்கென முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரை மற்றும் திருகோணமலை, திரியாய் விகாரை ஆகியவற்றுக்காக காணிகளை கோரியுள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இவ்வாறு முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைக்கு 3,000 ஏக்கர் காணியும் திருகோணமலை, திரியாய் விகாரைக்கு 2,000 ஏக்கர் காணியும் கோரப்பட்டுள்ளன.

வனவள பாதுகாப்பு திணைக்களம், காணி திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான அரசாங்க காணிகளில் இந்தளவு

காணிகளை தொல்பொருள் பிரதேசங்களென தெரிவித்து எத்தகைய அடிப்படையில் கோரப்படுகிறதென்பதை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தொல்பொருள் ஜனாதிபதி செயலணி மூலம் மேற்படி காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் காணிகள் தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டுமென அந்த செயலணியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த தலைமையகமாக கருதப்படும் அநுராதபுரம் மஹாபோதி விகாரைக்கோ அல்லது சிறந்த பாரம்பரிய மரபுரிமை சொத்தாக கணிக்கப்படும் சிகிரியாவுக்கும் கூட இந்தளவு காணிகள் கிடையாதென்றும் எனினும், குருந்தூர்மலை விகாரை மற்றும் திரியாய் விகாரை ஆகியவற்றுக்கு இந்தளவு காணிகள் எந்த அடிப்படையில் கோரப்பட்டுள்ளதென்பதை விஞ்ஞானபூர்வத் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் ஆராய்வதற்காகவே ஜனாதிபதி இந்த நிபுணர்கள் குழுவை நியமிக்கவுள்ளார்.