கிராமப் பகுதிகளில் அமைதியையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் கிராம மட்டத்தில் நல்லிணக்க குழுக்கள் நியமிக்கப்பட்டு வருவதாக நீதி, அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு மொத்தமாக 21,374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் 6,386 முறைப்பாடுகள் முப்படையினர் தொடர்பானவை.
அதற்கமைய அலுவலகத்தின் மூலம் கடந்த நான்கு வருடங்களாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க 2020 ஆம் ஆண்டு 184 முறைப்பாடுகளும் 2021 ஆம் ஆண்டு 95 முறைப்பாடுகளும் 2022 ஆம் ஆண்டு 2,110 முறைப்பாடுகளும் 2023 ஆம் ஆண்டில் இதுவரை 781 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு தொடர்பில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்த ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் யோசனைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக ஊடக நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,
“காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளுக்கிணங்க யுத்தம் காரணமாக உயிரிழந்துள்ள மற்றும் காணாமற்போயுள்ளவர்கள் தொடர்பில் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன.
சேதமடைந்துள்ள சொத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது .இனங்களுக்கிடையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய அமைதி மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தின் மூலம் கிராமப்புறங்களில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் கிராமிய மட்டத்தில் குழுக்களை நியமிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். அந்த குழுக்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் மக்களின் ஆவணங்கள் தொடர்பில் எழுந்துள்ள சட்டரீதியான சிக்கல்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்காக அந்த மாகாணத்தில் 4 நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதன் மூலம் அந்த மாகாணத்தில் நிலவிய சிக்கல்கள் 90 வீதமானவற்றிற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.