இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் இணைந்து அதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறியவை வருமாறு,
” தென்னாபிரிக்காவின் சர்வதேச தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழு
தொடர்பான ஆரம்பக் கற்கைகளை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆகியோர் அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்தனர்.
குறித்த விஜயத்தின்போது தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் சர்வதேச தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டு அரச பிரதானிகளுடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.
அதற்கமைய, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, எமது நாட்டில் உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு பொறிமுறையை தாபிப்பதற்காக இரு அமைச்சர்களும் இணைந்து தாக்கல் செய்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.” – என்றார்.