மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம்மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.
மே மாதத்துக்கான முதல்வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் வியாழக்கிழமை மத்திய வங்கி சட்டமூலம் குறித்தான 2ஆம் வாசிப்புமீதான விவாதம் இடம்பெறவிருந்தது.
எனினும், குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுத்தன. சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு அவகாசம் தேவையென எதிரணிகளும், சிவில் அமைப்புகளும் வலியுறுத்திவந்தன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,
” மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டு, அச்சட்டமூலத்தை பொது இணக்கப்பாட்டுடைய சட்டமூலமாக மாற்றியமைப்பதற்கு கால அவகாசம் வேண்டுமென ஜனாதிபதியிடம் இன்று (9) தொலைபேசியூடாக கோரிக்கை விடுத்தேன். இதற்கு இணங்குவதாக ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு நன்றி கூறுகின்றேன்.” என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர்,
” நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழு கூட்டத்தில், அடுத்த திகதி எப்போது என்பது பற்றி தீர்மானிக்கலாம்.” என்றார்.