You are currently viewing பஸிலின் கூட்டணி யோசனையும் தோல்வி பீதியும்!

பஸிலின் கூட்டணி யோசனையும் தோல்வி பீதியும்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயமாக அமையும் எனக் குறிப்பிட்டு புதியதொரு கூட்டணிக்கான யோசனையை மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ள விவகாரம் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த கூட்டுக்கு தமது கட்சி தயார் எனவும், இது விடயத்தில் ஆன்மீக தலைவர்கள், சிவில் அமைப்புகள், ஊடகங்கள் என்பனவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பஸில் ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.
சிரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலொன்றின்போதே இதற்கான யோசனையை முன்வைத்து, அதற்குரிய விளக்கத்தையும் பஸில் ராஜபக்ச வழங்கி இருந்தார்.

“ நாடு முழுவதும் சிறந்த ஏற்பாட்டு கட்டமைப்பு உள்ள பிரதான இரு கட்சிகள் நாட்டில் உள்ளன. ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி. இரண்டாவது தேசிய மக்கள் சக்தி. அதேபோல மக்கள் சக்தி உள்ள இரு கட்சிகள் உள்ளன.

ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி, இரண்டாவது மொட்டு கட்சி. ஏற்பாட்டு பலமும், மக்கள் சக்தியும் என இரண்டு பலமும் உள்ள கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாகும். இதற்கிடையில் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் எனக் கருதப்படுபவரின் கட்சிக்கு மக்கள் பலமும் இல்லை, ஏற்பாட்டு பலமும் இல்லை.” எனவும் பஸில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதாவது ஐக்கிய தேசியக் கட்சி வசம் சிறந்த அரசியல் தலைவர் இருந்தாலும் அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையே பஸில் கூறவிளைகின்றார்.

“ ஐக்கிய தேசியக்கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றாக இருந்துள்ளன. ஜே.வி.பியும் சந்திரிக்கா அரசில் இருந்துள்ளது. நல்லாட்சியின்போது இணைந்து செயற்பட்டது. எனவே, இந்த மூன்று தரப்புகளும் இணைந்து, நாட்டுக்காக தமது கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.” எனக் குறிப்பிட்டு கூட்டணி அமைப்பதற்கு தடை இல்லை என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ நாட்டின் நலன்கருதி நாம் பல தியாகங்களை செய்தோம். மேலும் பல தியாகங்களையும் செய்ய தயார். இந்த இணைவுக்கான சாத்தியம் பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும். வெளிப்படையாகவே நான் இந்த கருத்தை வெளியிடுகின்றேன். எந்தவொரு தரப்புமீதும் எமக்கு வைராக்கியம் கிடையாது.

நாட்டின் நலன்கருதியும், மக்கள் நலன்கருதியும் இணைய வேண்டிய இடத்தில் இணைந்து செயற்பட நாம் தயாராகவே இருக்கின்றோம். அறகலயவின்போதுகூட ஆட்சியமைக்க நாம் எதிரணிகளுக்கு அழைப்பு விடுத்தோம்.நாடாளுமன்றத்தில் ஆதரவை வழங்க முன்வந்தோம்.
தனித்து போட்டியிட்டு பின்னர் கூட்டணி அமைக்கலாம், அல்லது கூட்டணி அமைத்து மூன்று தரப்புகளும் களமிறங்கலாம். பிரதமர் வேட்பாளர் பதவி என்பதையெல்லாம் முன்னிலைப்படுத்தக்கூடாது. பெரும்பான்மை ஆதரவு உள்ள தரப்புக்கு முக்கியத்துவம் இருந்தால் நல்லம்.

நாட்டின் நலன் கருதி, மக்கள் நலன் கருதி இந்த கூட்டணிக்கு நாம் தயார்.” என்ற விடயத்தையும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

“ நான் இந்த யோசiனைய முன்வைப்பது தோல்வி பயத்தால் அல்ல, வடக்கு, கிழக்கில்கூட எமக்கு வாக்குபலம் உள்ளது.” எனக் குறிப்பிட்டு கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் பஸில் சமாளித்துள்ளார்.
அதேவேளை, பஸில் ராஜபக்சவின் இந்த அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன நிராகரித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மொட்டு கட்சிக்கான செல்வாக்கு சரிந்துள்ளது என்பது உண்மையே, அண்மைய கருத்து கணிப்புகளும் அதனையே வெளிப்படுத்துகின்றது. எனவே, தேர்தலொன்றுக்கு தனித்து சென்றால் என்ன நடக்கும் என்பது பஸிலுக்கு தெரியாமல் இருக்காது. அதன் வெளிப்படாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கும் என தெரியவருகின்றது.