You are currently viewing LLRC குழுவின் அறிக்கையையே அமுல்படுத்தாத அரசின் TRC குழுவை எப்படி நம்புவது?

LLRC குழுவின் அறிக்கையையே அமுல்படுத்தாத அரசின் TRC குழுவை எப்படி நம்புவது?

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை இன்னும் நிறைவேற்றவில்லை. இங்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியமும் இல்லை, எனவே, சர்வதேச சமுகம் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் எமக்கு நீதி வேண்டும்.”

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு போன்றவற்றின் பரிந்துரைகளைக்கூட முழுமையாக அமுல்படுத்தாத இந்த அரசு, டிஆர்சி எனப்படுகின்ற உண்மையை கண்டறியும் குழு ஊடாக எதை சாதிக்கபோகின்றது? இது நடக்ககூடிய காரியம் அல்ல என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சிறிதரன் எம்.பி. இது தொடர்பில் கூறியவை வருமாறு,

“ ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளது, இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை ஏற்று, அது தொடர்பில் குறைந்தபட்சம் மன்னிப்புகேட்பதற்குகூட இங்குள்ள தலைவர்கள் தயாரில்லை. 2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் ஏற்றுக்கொண்ட விடயங்களைக்கூட 9 வருடங்கள் கடந்தும் இங்கு நடைமுறைப்படுத்தவில்லை. இலங்கையை இனியும் நம்ப முடியாது ஐ.நாவும் அதன் இணைந்த நிறுவனங்களும் ஒரு கட்டத்துக்கு வந்து, அடுத்தக்கட்டம் பற்றி சிந்திக்க வேண்டும். நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

ஜெனிவா தீர்மானம் என்பது சாதாரண சம்பவம் அல்ல, ஒரு இனத்தின் கண்ணீர். இங்கு நீதி கிடைக்காது என்பதால்தான் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேசத்தை நாடுகின்றனர், டயஸ்போராக்கள்மீதுகூட கோபம் கொள்கின்றனர், ஆனால் இங்கு நடந்த படுகொலைகளை வெளிக்கொண்டுவருவதில் அவர்கள் தெளிவாக செய்திகளை வழங்கிவருகின்றனர்.” – என்றார்.