You are currently viewing இனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் எது?

இனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் எது?

பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான – களைவதற்கான – மார்க்கங்களில் பிரதானமானது வெளிப்படையாகக் கலந்து ரையாடுவதாகும். உண்மைகளை – யதார்த்தங்களை – திறந்த மனதுடன் பேசினால் பல சிக்கல்களை இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியும். நாட்டில் கடந்த எழுபத்தியைந்து ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இழுபடும் தேசிய இனப் பிரச்சினையை தீர்க்கும் விடயத்துக் கும் இந்த அணுகுமுறை பொருந்தும். ஆனால் சம்பந்தப்பட்ட தரப்புகள் வெளிப் படையாகவும் உண்மையாகவும் நேர்மை யாகவும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற் குத் தயார் இல்லை என்பதுதான் இங்கு பிரதான பின்னடைவு நிலைமையாகும்.

இலங்கைத்தீவு இன்று இப்படி மோசமான நிலைமைக்கு – பொருளாதாரப் பின்னடைவு நெருக்கடிக்கு – சென்றமைக்குக் காரணம் இந்த நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தமும் அதன் விளைவுகளும்தான் என்ற உண்மையைக் கூட இலங்கைத் தலைவர்கள் ஒப்புக்கொள்ளாமல் பின்னடித்து நிற்கின்றனர். அதை ஒப்புக் கொண்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நிரந்தரமாக மீளுவதற்காகத் தேசிய இனப் பிரச்சினைக்கு நீதி, நியாயமான – நின்று, நிலைத்து, நீடிக்கக்கூடிய – தீர்வு கண்டாக வேண்டும் என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதால், அந்த விவகாரத்தைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள அவர்கள் முன்வருகின்றார்கள் இல்லை.

ஆயினும் போரினால்தான் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்ற உண்மையை இலங்கையின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இந்தியாவில் வைத்து ஒப்புக்கொண்டுள்ளார் என இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பங்களிப்புடன் புதுடில்லியில் நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார கலந்துரையாடல் சபையில் கருத்து வெளியிட்ட, இலங்கையின் வெளி விவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவே, இலங்கையில் அதிகரித்த யுத்தச் செலவு எவ்வாறு அபிவிருத்திக்குத் தடையாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரச்சினைக்கு மூலம் எது? “1985இல் எங்களின் பாதுகாப்புச் செலவு 18 கோடி 80 லட்சம் அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஆனால் 2008இல் யுத்தத்தின் முடிவில் இந்தச் செலவு 150 கோடி அமெரிக்க டொலர் களாக உயர்ந்தது” என தாரக பாலசூரிய அங்கு கூறியிருக்கின்றார்.

இலங்கை நாட்டின் தேசியவாதம் ‘சில சமூகங்களை’ ஆயுதப் போராட்டத்திற் குள் தள்ளியது என்பதையும் இராஜாங்க அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பௌத்த – சிங்களப் பேரினவாதமே இந்த மோசமான நிலைமை ஏற்படக் காரணம் என்பதை ‘நாட்டின் தேசியவாதம்’ என்ற குறியீட்டுச் சொல் மூலம் அவர் குறித்துரைக்கின்றார் எனக் கொள்ள லாம்.

அதிகாரப் பகிர்வின்றி இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாது என்று அவர் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.

“சில சமூகங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியமை அவர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்தது. வளர்ச்சி என்பது சமூகத்தின் சில பிரிவுகளுக்கு மட்டுப்படுத்தப் பட முடியாது. அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், பெரும்பான்மை வாதம் என்ற துருப்புச் சீட்டை, அரசியல் வாதிகள் பயன்படுத்தி, குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் பிரிவினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். இது கவனிக்கப்பட வேண்டும்.’’- என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமும், வடக்கு, கிழக்கில் இன்னமும் தொடரும் இராணுவ மயமாக்கலும் தான் பிரதான காரணம் என ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும், போரினால் பாதிக்கப்பட்ட சமூகத் தலைவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும், தென்னிலங்கை அரசியல் தலைமைத் துவங்கள் அதனை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது செய்தி விமர் சகர்களால் சுட்டப்படுகின்றது.

தென்னிலங்கையின் சில தலைவர்கள் எப்போதாவது இருந்து விட்டு இந்த உண்மையை வெளிப்படையாக கூற முனைந்தாலும், தெற்கின் இனவெறிப் போக்குக் கட்டமைப்பில் அந்த குரல் செவிடன் காதில் ஊதிய சங்காக – புறக்குடத்து நீராக – வீணாகி போவதுதான் வழமை. இப்போதும் ராஜாங்க அமைச்சர் தாரக பால சூரியாவின் கருத்தும் அப்படித் தான் ஆகியுள்ளது.