You are currently viewing ” சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல”

” சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல”

“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும்.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அரசமைப்பில் ஏற்பாடு இல்லை. அதற்கான தேவைப்பாடும் அரசுக்கு இல்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா என என்னால் கூற முடியாது. அவ்வாறு நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு முடியும். அதற்கான சட்டப்பூர்வ அனுமதி அவருக்கு உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், குறைநிரப்பு பிரேரணை ஒன்றின் ஊடாக பொதுத்தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் நீதி அமைச்சர் என்ற வகையில் நானோ அல்லது அமைச்சரவையில் வேறு எவரோ யோசனை எதையும் முன்வைக்கவில்லை. அதற்கான உத்தேசமும் இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் அது ஜனநாயக ரீதியிலான பொறிமுறையும் அல்ல. சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல. 1982 இல் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பால் ஏற்பட்ட கறுப்பு புள்ளி இன்னும் மாறவில்லை.” – என்றார்.

அரசமைப்பு மீறல்

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு தற்போதைய ஜனாதிபதி எந்த விளையாட்டில் ஈடுபட்டாலும் அந்த முயற்சி கைகூடாது. 2024 நவம்பர் 18 இற்கு பிறகு ஜனாதிபதி ஆட்சியில் இருக்க முற்பட்டால் அது அரசமைப்பை அப்பட்டமாக மீறும் செயலாகவே அமையும் – என்று சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது. ஜுலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும். ஒருநாள்கூட இதனை தாமதிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது.
எனவே, 2024 இல் குறித்தொகுக்கப்பட்ட நாளில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதைய அரசு சட்டப்பூர்வமான அரசு என்ற சட்டப்பூர்வத்தன்மையை இழந்துவிடும். அதாவது நவம்பர் 18 ஆம் திகதிக்கு பிறகு ஒரு மணிநேரம்கூட ஜனாதிபதி அப்பதவியில் நீடிப்பதற்கு முற்பட்டால் அது சட்டவிரோதம். அரசமைப்பை மீறும் செயல்.

சட்டவிரோத அரசால் வரி வசூலிக்க முடியாது, படையினருக்கு கட்டளைகளை பிறப்பிக்க முடியாது. வெளிநாட்டு தூதுவர்கள், ஆளுநர்களை நியமிக்க முடியாது. சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச நிறுவனங்களுடன் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபடமுடியாது. நிதி இல்லை எனக்கூறிகூட ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. ஆக ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஜனாதிபதி தேர்தலை பிற்போட மனதுக்குள் வியூகம் வகுக்கப்பட்டாலும் அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும்.” – என்றார்.