You are currently viewing ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு வார்த்தைக்கூட இல்லை – தமிழ்க் கட்சிகள் கொதிப்பு!

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு வார்த்தைக்கூட இல்லை – தமிழ்க் கட்சிகள் கொதிப்பு!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணாமல், பொருளாதார மீட்சியை பெற முடியாது. அவ்வாறு செய்யலாம் என நினைத்து முன்னோக்கி பயணித்தால் நாடு அதளபாதாளத்துக்குள் செல்வதை எவராலும் தடுக்க முடியாமல் போகும் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்;. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தைக்கூட இடம்பெறாத ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை முற்றாக நிராகரிக்கின்றோம் – எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய அரசின் கொள்கை விளக்க உரை தொடர்பில் சபையில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சுமந்திரன், பொருளாதாரப் பிரச்சினையின் அடிப்படையே தமிழ் தேசிய இனப்பிரச்சினைதான் எனவும் சுட்டிக்காட்டினார்.

“ இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமது உரையில் ஜனாதிபதி ஒரு வார்த்தையக்கூட பேசவில்லை. தான் பதவியேற்றபோது, இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கூறி இருந்தார். சர்வக்கட்சி மாநாடுகளையும் மூன்று தடவைகள் நடத்தி இருந்தார். 75 ஆவது சுதந்திர தினத்துக்குள் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றெல்லாம்கூட பறை சாற்றினார். ஆனால் 76 ஆவது சுதந்திர தினமும் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க உரையில் இனப்பிரச்சினை தொடர்பில் அவர் மூச்சுகூட விடவில்லை.” – எனவும் சுமந்திரன் கடும் கவலை வெளியிட்டார்.

“ ஜனாதிபதி எம்மை பேச்சுக்கு அழைத்தபோது, இது வெறும் வார்த்தைதான், தீர்வை காண்பதற்குரிய அரசியல் பலம் ஜனாதிபதிக்கு கிடையாது, தீர்வை எதிர்ப்பவர்களை வைத்துக்கொண்டு போலி பெரும்பான்மைமூலம் எதனையும் செய்ய முடியாது, ஆக வார்த்தை ஜாலங்களால் ஜனாதிபதி ஏமாற்றுகின்றார் என சுட்டிக்காட்டி இருந்தோம். எனினும், தீர்வு முயற்சிக்கு நாம் தடங்களாக இருந்தோம் என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது என்பதற்காக சர்வக்கட்சி மாநாடுகளில் பங்கேற்றோம். அப்படி செய்தும்கூட முன்னேற்றம் இல்லை.” – எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

“ இனப்பிரச்சினை தொடர்பில் நடைபெறும் பேச்சுகளின்போது எட்டப்படும் முடிவுகளில் ஒரே ஒரு விடயம்தான் நிறைவேற்றப்படுகின்றது என சம்பந்தன், ஜனாதிபதியிடம் தெரிவித்தார். அது என்னவென்று ஜனாதிபதி கேட்டார், அடுத்த கூட்டத்துக்கான திகதி மட்டுமே அது என்றார் சம்பந்தன். கூட்டங்களைக்கூட்டி செய்வதாக மாத்திரம் சொல்லி, அதனை செய்யாதிருக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை நிராகரிக்கின்றோம்.” – எனவும் சுமந்திரன் எம்.பி. இடித்துரைத்தார்.

அதேவேளை, இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட அத்திவாரமே தமிழ் தேசிய இனப்பிரச்சினைதான், இது தொடர்பில் பேச்சு நடத்தி முறையான அரசியல் தீர்வை முன்வைக்காமல், ஆயுத தீர்வை முன்வைத்து , அதற்காக கடன்களை பெற்று பொருளாதாரத்தை ஆட்சியாளர்கள் நாகமாக்கினர். இனப்பிரச்சினையை தீர்க்காமல் – தமிழ் தேசிய இனத்தின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படாமல் இந்த நாட்டின் பொருளாதாரம் எப்போதும் சரிபட்டுவரப்போவதில்லை. எவ்வளவுதான் பேசினாலும், தான் செய்து முடித்துவிட்டேன் என சொன்னாலும் உண்மை மக்களுக்கு தெரியும். ஜனாதிபதி தேர்தல் வரும்போது மக்கள் விழிப்பாக இருந்து தமது பதிலை அளிக்க வேண்டும்.

வெறுமனே இது பொருளாதாரப் பிரச்சினை எனக் கூறிக்கொண்டு, அடிப்படை பிரச்சினையான தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவை எடுக்காமல் ஜனாதிபதி தொடர்ந்து முன்னோக்கி செல்வாராக இருந்தால் இந்நாடு மேலும் அதளதபாதாளத்துக்குள் விழுவதை எவராலும் தடுக்க முடியாது.” – எனவும் சுமந்திரன் திட்டவட்டமாக அறிவித்தார்.