You are currently viewing கெஹலியவின் கைதும் நீதித்துறைமீதான நம்பிக்கையும்!

கெஹலியவின் கைதும் நீதித்துறைமீதான நம்பிக்கையும்!

தரமற்ற இம்யுனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்து அவற்றை மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று கெஹலிய ரம்புக்வெல் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அதனை தவிர்த்து வந்தார். கூட்டங்கள் இருப்பதாகக் கூறி புதிய திகதிகளைகோரி இழுத்தடிப்புகளை செய்துவந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் நீதிமன்றத்தில் கருத்து முன்வைக்கப்பட்டது. அமைச்சர் வேண்டுமென்றே தவிர்த்துவருகின்றார் என சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து குற்ற புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், அமைச்சருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கெஹலிய ரம்புக்வெல்ல சிஐடியில் நேற்று முன்னிலையானார்.
அவரிடம் சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதன்பின்னரே இரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சிஐடியினர் அவரின் வீட்டுக்கு சென்றே வாக்குமூலம் பெற்றிருந்தனர். இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதேபோல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு சிவில் அமைப்புகளும் போராடிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தபோது, மருந்து மோசடி தொடர்பில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. எனினும், ஆளுங்கட்சி அதனை தோற்கடித்தது. ஆனாலும் அழுத்தங்கள் வழுத்ததால் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டது. எனினும், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகின்றது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கைது இலங்கையின் நீதித்துறைமீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது தேர்தல் வருடம் என்பதால் கெஹலிய விவகாரத்தில் அரச உயர்மட்டம் தலையீடுகளை செய்யவில்லை எனக் கூறப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் மருந்துபோன்ற மக்களின் உயிருடன் தொடர்புபட்ட விடயங்களில் மோசடி செய்வது மன்னிக்க முடியாத குற்றமாகும். சட்டம் தனக்கே உரிய பாணியில் இது விடயத்தில் வீறுநடை போட வேண்டும்.