You are currently viewing நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அரச பங்காளிக்கட்சிகள் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட எதிரணிகள் எதிராக வாக்களித்தன.

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற நிலையில் இரண்டாம் வாசிப்புமீது இன்றுa மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் முடிவடைந்ததும் பி.ப 5.00 மணிக்கு எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்லவால் வாக்கெடுப்புக் கோரப்பட்டது.

இதற்கு அமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்கும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. இதற்கமை இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர், குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திம வீரக்கொடியால் சட்டமூலத்தின் 36வது பிரிவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தத்துக்கு வாக்கெடுப்புக் கோரப்பட்டது. இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த திருத்தத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டு 41 மேலதிக வாக்குகளால் இந்தத் திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்து நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் இச்சட்டத்தில் கையொப்பமிட்ட பின்னர் அது நடைமுறைக்கு வரும்.