You are currently viewing பாடம் கற்றுக்கொள்ளாத காவல்துறை…….!

பாடம் கற்றுக்கொள்ளாத காவல்துறை…….!

நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் பொலிஸின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணையொன்றும் இடம்பெற்றுவருகின்றது.

நாரம்;மல பகுதியில் இருந்து கிரிஉல்ல பகுதியை நோக்கி நேற்று முன்தினம் இரவு பயணித்துக்கொண்டிருந்த பட்டா ரக லொறியொன்றை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் இருவர் சைகைகாட்டியுள்ளனர்.

அவர்கள் சீருடையில் இருக்கவில்லை எனவும், சிவில் உடையிலேயே அப்போது இருந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

லொறி நிறுத்தப்படாமல் பயணித்துள்ளது, இதனையடுத்து பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் லொறியை துரத்திச்சென்றுள்ளனர்.

சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம்வரை சென்ற பின்னர், லொறி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் லொறியை சோதனை நடத்த முற்பட்டுள்ளனர். அவ்வேளையில் உப பொலிஸ் பரிசோதகர், லொறி சாரதியின் தலைப்பகுதியில் துப்பாக்கியை வைத்துள்ளார்.  
இதன்போது துப்பாக்கி இயங்கியுள்ளது.  

இந்த சம்பவத்தையடுத்து பிரதேச மக்கள் கொதிப்படைந்தனர், நாரம்மல பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். நீதிகோரி கோஷம் எழுப்பினர். இதனால் நேற்று முன்தினம் இரவு பொலிஸ் நிலைய வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. சிலர் பொலிஸ் நிலையம்மீது தாக்குதலும் நடத்தினர். இதனையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.

பொலிஸ் உப பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது. அதிகாரி தரப்பில் தவறு நடந்துள்ளது என்பது தெரிகின்றது. பொலிஸ் மோட்டார் சைக்கிளிலும் பயணிக்கவில்லை. எனவே, அவர் பணியில் இருந்து நிறுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

42 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

பாடம் கற்க மறுக்கும் பொலிஸ்?

இது ஒரு சம்பவம் அல்ல, இதற்கு முன்னரும் பொலிஸார் இவ்வாறு அராஜகமான முறையில் நடந்துகொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை மக்கள் பார்த்ததால் சரி இல்லையென்றால் வேறுகதைகூறப்பட்டு, பொலிஸாருக்கு வெள்ளையடிப்பு சம்பவமே நடந்திருக்கும்.

துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி சிவில் உடையிலேயே இருந்துள்ளார், பொலிஸ் மோட்டாரில் பயணிக்கவில்லை, அவர் தரப்பில் தவறு நடந்துள்ளது என்பதையெல்லாம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், குறித்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்படுவார் எனவும் அறிவித்தார்.

ஆனால் பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் என கொடூரங்கள் தொடர்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.