You are currently viewing புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமானதா?

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமானதா?

ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், அரசியல் இருப்புக்காகவே ஒரு சிலர் அதனை எதிர்க்கின்றனர் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் மனுக்களும் தொடுக்கப்பட்டுள்ளன. மனுமீதான தீர்ப்பு ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்பிவைக்கப்படும்.

அதேவேளை புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு மீளப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன .

இவ்வாறானதொரு பின்புலத்தில் புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களை நீதி அமைச்சர் நிராகரித்துள்ளார்.

” நாட்டில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமானது என விமர்சித்தனர். அச்சட்டத்தில் இருந்த சில பாரதூர விடயங்களை நீக்கிவிட்டு, ஜனநாயக அடிப்படையிலேயே உத்தேச சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், தமது அரசியல் இருப்புக்காக சில அரசியல் வாதிகளும், கட்சிகளில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணிகளும் அதனை விமர்சிக்கின்றனர்.

ஜனநாயகம், மனித உரிமைகள், நாடு மற்றும் நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு உரிய வரைவிலக்கணம் இருக்கவில்லை. அந்த வரைவிலக்கணம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமைகள் அமைப்பு கண்காணிக்க இடமளிக்கப்பட்டுள்ளது. இப்படி பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவை குறித்து தெளிவில்லாமல், சட்டம் பற்றியும் தெளிவில்லாதவர்களே விமர்சிக்கின்றனர்.” – எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.