You are currently viewing ’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேபோல், மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமென அனைத்து மாகாணங்களினதும் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

யாழ். மாவட்ட தொழில் வல்லுனர்களுடன் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

” வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும். மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். வட மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும் இங்கு உள்ளன. வடக்கின் அபிவிருத்திக்கு மட்டுமன்றி முழு நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிக்க முடியும்.

அதற்கு போதுமான அதிகாரப்பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. அந்த செயற்பாடுகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களே போதுமானவை என நினைக்கின்றோம். கொழும்பில் இருந்து பணம் வரும் வரை காத்திருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் ஜப்பான் தொடர்பில் கவனம் செலுத்தினால், ஜப்பான் சமஷ்டி ஆட்சியுள்ள ஒரு நாடு அல்ல. ஆனால் அதன் அனைத்து மாகாணங்களும் அபிவிருத்தி அடைந்துள்ளன. அதேபோன்று, கொரியா, ஐக்கிய இராச்சியம், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. அப்படியானால் ஏன் ஒரு நாடாக எமக்குரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது?

அதிகாரப் பகிர்வு பற்றி கதைப்பதுபோன்று, அந்த அதிகாரங்களை தமது மாகாணங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். நாம் அரசியல் ரீதியாக அதிகாரப்பகிர்வு பற்றி பேசுகிறோம். சட்டத்தால் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் வழங்கலாம். ஆனால் உங்களின் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய போதிய பணம் இல்லை என்றால் அதன் பெறுமதி என்ன என்று நாம் கண்டறிய வேண்டும்.

அதிகாரப் பகிர்வு குறித்து நாம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இன்றைய நிலவரப்படி மேல் மாகாணத்தால் மாத்திரமே தனது சொந்த செலவை செய்ய முடிகிறது. அதன்படி, எனைய அனைத்து மாகாணங்களும் மேல் மாகாணத்துடன் இணைகின்றன. எனவே, தமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய, தங்கள் சொந்த மாகாணங்களுக்குள் வலுவாக இருக்க வேண்டும்.

உங்கள் மாகாணத்தில் ஒரு வெளிநாட்டு மொழிப் பாடசாலையை நிறுவ விரும்பினால், அதற்கு அரசாங்கம் ஏன் பணம் வழங்க வேண்டும்? அதற்கான கேள்வி மற்றும் தேவை இருந்தால், நீங்கள் அதை எளிதாக ஆரம்பிக்க முடியும். மாணவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கல்வி இப்படித்தான் செயல்படுகிறது. இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர் செய்யத்தான் என்னால் முடியும்.” – எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.