You are currently viewing இமயமலைப் பிரகடனத்தை நிராகரித்தது அமரபுர பீடம்

இமயமலைப் பிரகடனத்தை நிராகரித்தது அமரபுர பீடம்

உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிக்காயவின் அனுநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் குழு தொகுத்த “இமயமலைப் பிரகடனம்” என்ற ஆவணம் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் கருத்து அல்லவென அந்த சங்க சபையின் உதவிப் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில், கடந்த வருடம் டிசம்பர் 8ஆம் திகதி, உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்த பிக்குகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ” மேற்படி பேரவை, சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி, அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தேரர்கள் இணைந்து உருவாக்கிய, அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனத்திற்கு” உற்சாக வரவேற்பு அளித்தார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.”

“இமயமலை பிரகடனம்” என்ற ஆவணம் ஏற்கனவே இலங்கைத் தமிழர்களாலும் பல புலம்பெயர் தமிழ் குழுக்களாலும் கடுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு, கூட்டு இமயமலைப் பிரகடனத்தை கையளித்த விடயத்தை “இணக்கமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கைக்கான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியமான முன்னேற்றம்.” எனக் குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும், உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்த பிக்குகளால் முன்வைக்கப்பட்ட கூட்டு இமயமலைப் பிரகடனம் குறித்து தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளதாக, அமைச்சின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.