You are currently viewing ‘கொரோனா எச்சரிக்கை’ – விழிப்பாகவே இருப்போம்…!

‘கொரோனா எச்சரிக்கை’ – விழிப்பாகவே இருப்போம்…!

மீண்டும் கொவிட் தொற்றுப் பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. பக்கத்து நாடான இந்தியாவில் தன் கைவரிசையை அது திரும்பவும் காட்டத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான ஊடாட்டம் காரணமாக அது இலங்கைக்குள்ளும் கால் பதித்திருக்கக் கூடும் என வைத்திய வட்டாரங்கள்சந்தேகம் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நாட்டின் சுகாதார சேவை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்தப் பாதிப்பும் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதனால் இந்த விடயத்தை இலகுவாகஎடுத்துக் கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டு, புதிய கொவிட்-19 திரிவு வகையினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை மதிப்பிடுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியிருக்கின்றது.

புதிய கோவிட்-19 வகையின் அபாயத்தை மதிப்பிடுவதற்காக சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோய்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவை உடனடியாகக் கூட்ட சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கச் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே வலியுறுத்தியுள்ளார்.

கொவிட்டின் மாறுபாடான அல்லது திரிவடைந்த புதிய வைரஸ் வடிவமே இப்போது தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் பரவி வருகின்றது.

“ இந்த மாறுபாட்டு வைரஸின் விளைவுகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாட்டின் தற்போதைய சூழல் முந்தைய கொவிட் -19 பரவலின் போது இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால், சுகாதார அதிகாரிகள் விரைவில் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் நிலைமை சிக்கலானதாக இருக்கும்’’ என்று அரசாங்க மருத்துவ அதிகாரி கள் சங்கச் செயலாளர் எச்சரிக்கின்றமை அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

“ எங்களுக்கு மருத்துவ ரீதியில் அச்சுறுத்தல் உள்ளது. மோசமான சூழ்நிலைக்கு நாங்கள் தயாராக வேண்டும். நாம் அறிந்த படி, உலக சுகாதார அமைப்பு சமீபத் தில் இதை (இந்த வைரஸை) ‘திரிவடைவதில் ஈடுபாடு’ கொண்டது ‘variant of interest’ என்று பெயரிட்டது. அது போகின்ற போக்கில் ‘கவலையின் திரிவாக’ (‘variant of concern’) உருவாகினால் கண்டிப்பாக நம் நாட்டிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோய்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவை உடனடியாகக் கூட்டி அச்சுறுத்தல் மதிப் பீடு செய்யுமாறு அமைச்சகத்தை வலியு றுத்துகிறோம். அப்போது, நோயின் தாக் கம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தலாம்’’ என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

மருந்துப் பொருள்கள் மற்றும் மனித வளங்களின் பாரிய பற்றாக்குறைக்கு மத்தியில் முழு சுகாதாரத் துறையும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதால் அரசாங்கம் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என வும் டாக்டர் அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பாராத வகையில் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் ஏதாவது நடந்தால் நாடு அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார் அவர்.

“மருந்துகள் மற்றும் மனித வளங்களின் பற்றாக்குறையுடன், மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களின் பாரிய வெளியேற்றத்தின் விளைவாக நாங்கள் தற்போது ஒரு பெரிய நெருக்கடியை
எதிர்கொள்கிறோம். அந்தச் சூழ்நிலை யின் பின்புலத்தில் நாம் மற்றொரு தொற்று நோயை எதிர்கொள்ள நேர்ந்தால் அது மிகவும் ஆபத்தானது. எனவே, ஆபத்தைத் தவிர்க்கவும், துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎடுக்க வேண்டும்’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த எச்சரிக்கையை அரசு கவனத் தில் உடன் எடுக்க வேண்டும். இது விட யத்தில் மெத்தனமாக இருந்தால் சில சம யங்களில் அந்தத் தவறுக்கு நாம் பெரிய விலை கொடுக்க நேர்ந்து விடும். நாடும் மக்களும் வரமுன் காக்கும் திட்டங்களில் கவனம் செலுத்துவது இன்றைய அவசர, அவசியத் தேவையாகும்.