You are currently viewing அறகலயவின்போதே குற்றச்செயல்கள் அதிகரிப்பு! பொலிஸாருக்கு 6 மாதங்கள் கெடு!!

அறகலயவின்போதே குற்றச்செயல்கள் அதிகரிப்பு! பொலிஸாருக்கு 6 மாதங்கள் கெடு!!

நாட்டில் தலைவிரித்தாடும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி – அவற்றை முற்றாக தடுப்பதற்கு பொலிஸாருக்கு ஆறுமாத கால கெடுவை வழங்கியுள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.

இந்த இலக்கை அடைவதற்கான பயணத்தின்போது எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணிய வேண்டாம் எனவும், பொலிஸாருக்காக தான் முன்னின்று செயற்படுவார் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

” பொலிஸார் தமது கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக எனக்கென இலக்கொன்று உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் நாட்டில் பாரியதொரு மாற்றத்தை பொலிஸார் ஏற்படுத்த வேண்டும். நாட்டில் குற்றச்செயல்களை தடுப்பது பிரதான இலக்கு. இந்த இலக்கை நோக்கி பயணிக்கும்போது எவராவது தடுக்க முற்பட்டால், தடைகளை தகர்த்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே எனது பழக்கம். பலம் வாய்ந்த நபராக இருந்தாலும் எனது அணுகுமுறை மாறாது. ” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

” அச்சமின்றி பொலிஸார் பணியை ஆற்றுங்கள். உங்களுக்காக நான் முன்னிலையாவேன். எந்தவொரு தலையீடுகளுக்கும் இடமளிக்கப்போவதும் இல்லை. பொலிஸாருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அது பற்றி என்னிடம் அல்லது பொலிஸாரிடம் தெரியப்படுத்துங்கள். அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்.

ஜுன் 31 ஆம் திகதிக்குள் நாட்டில் அனைத்து மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் மாற்றமொன்று அவசியம். குற்றச்செயல்களை தடுப்பதற்கு மக்களும் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

அறகலய காலம்

அறகலய காலப்பகுதியிலேயே நாட்டில் போதைப்பொருள், பாதாள கோஷ்டி செயற்பாடுகள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்தன எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

” அமைச்சு பதவியை பொறுப்பேற்ற நாளில் இருந்தே எனக்கு பல சவால்கள் இருந்தன. பதவியேற்ற காலப்பகுதியில் கொழும்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பெயர்களில் கிராமங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரவில்லை. நிறுவனங்கள் மூடப்பட்டன.

தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து இயல்பு நிலையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி எனக்கு கூறினார். அதற்காக அவர் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார். இதன்படி கோட்டா கோ கம உள்ளிட்ட கிராமங்கள் முதலில் அகற்றப்பட்டன. இவ்வாறுதான் கட்டம் கட்டமாக இயல்பு நிலை ஏற்பட்டது. கடந்த ஜுலை மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலைமை சாதகமாக உள்ளது.

அறகலய காலப்பகுதியால்தான் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக அறகலய காலத்தில் பேரணிகள், போராட்டக்காரர்கள் விவகாரம் தொடர்பிலேயே பொலிஸார் செயற்பட்டனர். அப்பிரச்சினைகள் குறித்த கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பொருள், பாதாளக்குழு மற்றும் இதர குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவதானம் செலுத்த பொலிஸாருக்கு நேரம் இருக்கவில்லை.

இந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் போதைப்பொருட்கள் அதிகரித்தன. பாதாள குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்தன.

அதேவேளை பாதாள கோஷ்டி உறுப்பினர் ஒன்று தமது போட்டியாளரால் கொல்லப்படுகின்றனர். இல்லையேல் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகின்றனர். எனவே, அந்நடவடிக்கையில் இருந்து விலகி இருப்பது நல்லது. பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கை தொடரும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.