You are currently viewing “இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”

“இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”

வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்துக்கு எதிரான அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. அதனை ஏற்படுத்தும் வகையிலுயே எமது அரசியல் பயணம் அமைந்துள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் உள்ள கட்சிகளை தடைசெய்ய கோருபவர்களின் மூளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அநுர கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ், சிங்களம், முஸ்லிம் என பல்லின சமூகங்களும் வாழும் நாட்டில், இரு மொழிகள் பேசப்படும் நாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. நாட்டில் 30 வருடகால போர் ஏற்பட்டது. வடக்கிலும், தெற்கிலும் அரசியல் அதிகாரத்துக்காக இனவாதம் விதைக்கப்பட்டதாலேயே போர்மூண்டது.

2009 மே மாதம் போர் முடிவடைந்த பின்னர் எமது நாட்டுக்கு புதியதொரு ஆரம்பம் தேவைப்பட்டது. எனினும், 14 வருடங்கள் கடந்தும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாமல் உள்ளது. ஆனால் இலகுவில் இனவாதத்தை பரப்பிவிடமுடியும். எனக்கு முன்னர் உரையாற்றிய உறுப்பினரின் (சரத்வீரசேகர) குரல் அதனையே பிரதிபலிக்கின்றது. அவர்கள் ஐக்கியத்தை விரும்புபவர்கள் அல்லர். இனவாதத்தில்தான் அவர்களின் இருப்பு தங்கியுள்ளது. இனவாத அரசியலை பிரசாரம் செய்வதே அவர்களின் பணியாகும். எனவே, வடக்கிலும், தெற்கிலும் தற்போது தேவைப்படுவது இனவாதத்துக்கு எதிரான அரசியலாகும்.

தற்போதைய சூழ்நிலையில் வடக்கில் உள்ள கட்சியை தடைசெய்ய யோசனை முன்வைக்கின்றனர். அவர்களின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். அதிகாரத்துக்காக இனவாதத்தைக் கையில் எடுத்ததால் ஏற்பட்ட விளைவு அனைவருக்கும் தெரியும். எனவே, இன ஐக்கியம்தான் தற்போது தேவைப்படுகின்றது. அந்த வழியிலேயே எமது அரசியல் பயணம் அமைந்துள்ளது.” – என்றார்.