You are currently viewing சனத் நிஷாந்தவுக்கு இரு வாரங்கள் தடை!

சனத் நிஷாந்தவுக்கு இரு வாரங்கள் தடை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இரு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே சபாநாயகர் இந்த தகவலை வெளியிட்டார்.

” சபையில் நேற்று நடைபெற்ற ஒழுக்கமற்ற நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின், நாடாளுமன்ற சேவை காலத்தை இன்று முதல் இரு வாரங்களுக்கு இடைநிறுத்த உத்தரவிடுகின்றேன்.” – என்றும் சபாநாயகர் சபைக்கு தெரியப்படுத்தினார்.

பொருளாதார நெருக்கடி விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பிகொண்டிருக்கையில் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மொட்டு கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் முன்வந்து – அவர் வசம் இருந்த ஆவணங்களையும் பறித்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சனத் நிஷாந்த, எதிர்க்கட்சி தலைவரின் ஒலிவாங்கியை மடக்கி, அவர் வசம் இருந்த அறிக்கையை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.