You are currently viewing பாராளுமன்றத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்தது அரசு – ஆதரவாக 122 வாக்குகள்!

பாராளுமன்றத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்தது அரசு – ஆதரவாக 122 வாக்குகள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 14 ஆம் திகதி முதல் இன்று (21) வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஶ்ரீலங்கா லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டலஸ் அணி, விமல் அணி என்பன எதிராக வாக்களித்தன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் எதிராக வாக்களித்தனர். ஆளுங்கட்சி பக்கம் உள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். நடுநிலை வகிக்கும் துமிந்த திஸாநாயக்கவும் ஆதரவாக வாக்களித்தார்.

நாளை 22 ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் நடைபெறும். டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.