You are currently viewing நீதிகோரும் மக்களுக்கு நிதி வழங்குவது ஏற்புடையதா?

நீதிகோரும் மக்களுக்கு நிதி வழங்குவது ஏற்புடையதா?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும், நீதிக்காகவுமே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடிவருகின்றனர். எனவே, தேவைப்படுவது நிதி அல்ல விசாரணையாகும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஜனாதிபதியிடம் நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். எமக்கு நீதி வேண்டுமே தவிர, சலுகைகளை கோரவில்லை.

போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ளன. எனினும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையிலேதான் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரியும், நீதிக்காகவும் உறவுகள் போராடிவருகின்றனர். அவர்களை விலைபேசாமல, அவர்களின் கோரிக்கை என்ன என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதேவேளை, நாங்கள் வந்தேறு குடிகள் அல்லர். இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் எமக்கும் இருக்கின்றன.” – எனவும் தவராசா கலையரசன் குறிப்பிட்டுள்ளார்.