“ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் எந்தவொரு எண்ணமும் அரசுக்கு இல்லை என்பதை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் உறுதிப்படுத்தி யுள்ளது. அத்துடன் மாகாணங்களின் அதிகாரங்க ளைப் பறித்து இன்னும் மத்தியில் குவிக்கும் திட்டமும் வெளிப்பட்டுள்ளது.”
இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
“ இனத்துவ வரைபில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்பதை அழிக்கும் திட்டம் இந்தவரவு – செலவுத் திட்ட உரையில் பிரதிபலித்தது. மாகாணங்களின் அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் திட்டங்களும், மாகாணங்கள் ஒருபோதும் தங்களுக்காகச் சிந்திக்க அனுமதிக்கப்படக்கூடாது என்ற இனத்துவ சிந்தனைகளும் இதில் வெளிப்பட்டுள்ளன.
இலங்கையை ஆட்சி செய்யும் இனத்துவ அரசுகள் இனப்படுகொலைகளைத் தான் நிகழ்த்தி வருகின்றன.
நான் வடக்கின் முதலமைச்சராக இருந்தபோது தமிழினப் படுகொலை தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி னேன். அதன்பின்னர்தான் மாகாண
சபைகளை வைத்திருப்பதில்லை என்ற தீர்மானத்தை ஆட்சியாளர்கள் எடுத்தனர்.
யுத்தம் முடிந்து 14 வருடங்களா கின்ற போதும் வடக்கில் இராணுவ இருப்பு குறைக்கப்படவில்லை. 2 இலட்சம் இராணுவத்தினர் இன்றும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அரச முகவர்களைப் பயன்படுத்தி பல்வேறு ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது நினைவு கூரல்கள் கூட நசுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில்தான் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் இனத்துவ வரைபில் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகம் என்பதை அழிக்கும் விடயம் பிரதிபலித்ததுள்ளது. மாகாணங்களின் அதிகாரங்களை மத்தியில் குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வில் எந்தவொரு அக்கறையும் காட்டப்படவில்லை. மாகாண சபைகளுக்கான நிதிகளை மாகாண சபைகளிடம்தான் தர வேண்டும். ஆனால், அதிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
மாகாண சபையை மத்தியின் அங்கமாக வைத்திருக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களைநடத்தும் எந்தவொரு எண்ணமும் வெளிப்படுத்தப்படவில்லை. மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் நடக்கப்போவதும் இல்லை. மாகாண சபைகளிடம் இருக்கும் ஒரு சில அதிகாரங்களும் பறிக்கப்படு கின்றன.” – என்றார்.