இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு ஆஸ்திரேலியாவும் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கும், ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (10) நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும், மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பான முழு விவரங்களும் அதற்கான தீர்வுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட சாணக்கியன் எம்.பி. கூறியவை வருமாறு , ” ஆஸ்திரேலியாவும் எமது நாட்டைப் போல் (Federal) கூட்டாச்சி அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும். அங்கு மாநிலம்போல் இங்கு மாகாணசபை முறைமை உள்ளது.
ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என பல்லின மக்களும் வாழ்ந்துவருகின்றனர். எனவே, ஆஸ்திரேலிய அரசானது, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்.” – என்றார் .