விளையாட்டுதுறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் எதிரணி பிரதம கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டதுடன், அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தினார்.
” ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் தொடர்பில் நீதிபதிகள் அறிந்திருக்க வேண்டும். சட்டமூலங்கள் தொடர்பில் போதிய தெளிவும் இருக்க வேண்டும்.
ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் உறுப்பினர்களை அமைச்சர் நீக்கிய பின்னர் அவர்கள் நீதிமன்றத்தை (மேன்முறையீட்டு நீதிமன்றம்) நாடினர். இதன்போது அமைச்சரவை அழைத்து நீதிபதி (நீதியரசர்) விளக்கம் கேட்டிருக்க வேண்டும். தூய்மையான கரங்களுடன்தான் நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆனால் அமைச்சரால் நீக்கப்பட்டவர்கள்தான் நீதிமன்றத்தை நாடினர். அமைச்சரை அழைத்து விசாரிக்காமல், அமைச்சரால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக்குழுவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் தவறு உள்ளது.” – எனவும் சட்டத்தரணியான லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
” இந்த இடைக்கால தடை உத்தரவின் பின்னர் லொறிகளின் பொருட்களை (கிரிக்கெட் சபையினர்) எடுத்துச்செல்கின்றனர். நிதி, ஆவணங்களை எடுத்துச்செல்லும் நிலையும் உருவாகியுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே புதிய இடைக்கால நிர்வாகக்குழுவை அமைச்சர் நியமித்தார். இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைபோதுமானது. நீதிமன்றத்திலும் சிற்சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. உறவுமுறை குறித்தும் புலப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை ஊழல்மிக்கது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, அவர்கள் நீதிமன்றத்தை நாடிய பின்னர், அமைச்சரவை அழைத்து விசாரித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் எதற்காக அவசரம் காட்டப்பட்டது. எனவே, நீதிபதி வழங்கிய தீர்ப்பு தவறாகும். இன்று (நேற்று)
நீதிபதி (நீதியரசர்) வழங்கியுள்ள தீர்ப்பு குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கு அத்திவாரம் இட்டுள்ளது. இரு தரப்பினரும் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நீதிபதிகளில் 99.9 வீதமானவர்கள் நேர்மையாக செயற்படக்கூடியவர்கள் என்பதையும் கூறியாக வேண்டும். ” – எனவும் கிரியல்ல குறிப்பிட்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழுவினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதில் நீதியரசர் பந்துல கருணாரத்னமீதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளையாட்டுதுறை அமைச்சரே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(நீதிமன்ற தீர்ப்பை நாம் விமர்சிக்கவில்லை. அதனை மதிக்கின்றோம். நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளே இங்கு தரப்பட்டுள்ளன.)