You are currently viewing 13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!

13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களும் அதில் உள்ளன. எனவே, இலங்கை மண்ணில் ஒருபோதும் அதனை முழுமையாக அமுல்படுத்த முடியாது – என்று விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய என்ற அரசியல் கூட்டணியின் பிரதி செயலாளரும், யுதுகம அமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார் .

” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். அயல்நாடு பருப்புபோட்டு, ஜனாதிபதி ஜேர்ஆர் ஜயவர்தனவை அடிபணிய வைத்தே சட்டம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹோட்டலில் வைக்கப்பட்டு, இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நிறைவேறிய சட்டத்தை ஜே.ஆர். ஜயவர்தன முழுமையாக அமுலாக்கவில்ல. ரணதுங்க பிரேமதாசவும் அதற்கு உடன்படவில்லை. அவர் இந்திய இராணுவத்தை இங்கிருந்து வெளியேற்றினார். அதிகாரப் பகிர்வை பற்றி பேசி ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அம்மையாரும் 13 ஐ முழுமையாக அமுலாக்கவில்லை.

இந்த மண்ணில் 13 ஐ முழுமையாக அமுல்படுத்தவும் முடியாது. ஏனெனில் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்கள் அதில் உள்ளன. இந்நாட்டில் இல்லாத சரத்துகள்கூட உள்ளன.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட நாட்டுக்கு புதிய அரசமைப்பு அவசியம். அதற்காகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் வாக்களித்தனர். அரசமைப்பு மறுசீரமைப்புக்காகவே நாடாளுமன்ற தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு வழங்கப்பட்டது. மக்களின் இந்த ஆணைக்கு புறம்பாக செயற்பட முடியாது.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க குறிப்பிட்டார்.