You are currently viewing ‘போர்’ நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு

‘போர்’ நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு

காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. எனினும், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட 45 நாடுகள் ஆதரவு வழங்க மறுத்து, நடுநிலை வகித்துள்ளன.

இஸ்ரேல் – காசா இடையே 20 நாட்களையும் கடந்து போர் நீடித்து வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் ஆயிரத்து 400 பேர் பலியான நிலையில், காகா நகரையே ஏவுகணை தாக்குதலால் உருக்குலைத்து வருகிறது இஸ்ரேல். இதனால் போரில் இதுவரை சுமார் 8 ஆயிரத்தம் பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை ஊடாக முயற்சிகள் எடுக்கப்பட்டன. ரஷ்யா கொண்டுவந்த இரண்டு தீர்மானங்களையும் தனது வீட்டோ அதிகாரம்மூலம் அமெரிக்கா தோற்கடித்தது. இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஐநா பொதுச்சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது.

இதில், மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அரபு நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா வலியுறுத்தியது.

ஆனாலும் கனடாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக 55 நாடுகளும், எதிராக 88 நாடுகளும் வாக்களித்த நிலையில் 23 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன. திருத்தத்தை செயல்படுத்த போதுமான பெரும்பான்மை இல்லாததால், கனடாவின் தீர்மானம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து காஸாவில் உடனடியாக போரை நிறுத்தும் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, பிரேசில், இலங்கை மற்றும் முஸ்லிம் நாடுகள் உட்பட 120 நாடுகள் வாக்களத்தனர்.

அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, நவ்று, பப்புவா நியூகியா உட்பட 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்த தீர்மானத்தில், சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்து, பொதுமக்களையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பாதுகாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீன குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவை. அவற்றை உறுப்பு நாடுகள் அமுல்படுத்த வேண்டியது கட்டாயம். ஆனால், இந்த சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயல்படுத்த வேண்டியது கட்டாயமில்லை. இருந்தபோதும், இந்த தீர்மானங்கள் ஒட்டுமொத்த நாடுகளின் கருத்தை பிரதிபளிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.