You are currently viewing சீன ஆய்வு கப்பலின் வருகை – இலங்கை வெளிவிவகாரக் கொள்கை குறித்து கடும் விசனம்

சீன ஆய்வு கப்பலின் வருகை – இலங்கை வெளிவிவகாரக் கொள்கை குறித்து கடும் விசனம்

ஷி யான் – 6 (Shi Yan 6) என்ற சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், இதற்கான அனுமதியையே அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஷி யான் – சீன சமுத்திரவியல் ஆய்வு கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் நாளை வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார் என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே இக்கப்பல் இலங்கைக்கு வர அனுமதி கோரியிருந்தது.

நாரா நிறுவனத்தோடு இணைந்து ஒருவார காலத்துக்கு மாத்திரம் இந்து சமுத்திர நீர் தொடர்பில் விசேட ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருப்பதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஆய்வுகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளவுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த சீனக் கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் தொடர்பில் இந்தியா கூடுதல் கரிசனை செலுத்தி வந்தது. தமது எதிர்ப்பையும் இராஜதந்திர மட்டத்தில் வெளிப்படுத்தி இருந்தது. இதனால் எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்கு பிறகு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தரப்பில் சீனாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவுக்கு சென்று முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சீன கப்பல் திடீரென வந்துள்ளது.

இதனையடுத்து இந்து சமுத்திரத்தில் தனது கண்காணிப்பை இந்தியா தீவரப்படுத்தியுள்ளது எனவும், கண்காணிப்பு கப்பல்கள், ட்ரோன்களை ஈடுபடுத்திவருகின்றது எனவும் தமிழ் மின் இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, இந்த கப்பல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

” சீனக் கப்பல் தொடர்பில்கூட தற்போதைய அரசு பல்வேறு கதைகளைக் கூறிவந்தது. வரவிடமாட்டோம் என இந்தியாவிடம் கூறிவிட்டு , மறுபக்கம் சீனாவிடம் வாருங்கள் என கூறியுள்ளனர். இவ்வாறு நொடிக்கு நொடி மாறி மாறி கதைப்பதால் முக்கியமான பல சர்வதேச நாடுகள் இலங்கைமீது சீற்றத்தில் உள்ளன .

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொய் சொல்வதுபோல் சர்வதேச சமூகத்திடம் பொய்யுரைக்க முடியாது. சீன கப்பல் விவகாரத்தை முழுவதுமாக குழப்பியதற்காக பல நாடுகள் நம் மீது கோபத்தில் உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியால் முடியாது போனாலும், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிகரமான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ளது. எனவே, நாட்டில் தற்போது ஆட்சியிலுள்ள பலவீனமான அரசின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை மக்கள் மீதும், இலங்கைமீதும் கோபம் கொள்ள வேண்டாம் என சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.” -என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றினாலும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.