பொலிஸாரின் பொறுப்பில் இருக்கும் போது சந்தேகநபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
பொலிஸார் கைது செய்த பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர் சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் இருப்பார்கள், அவர்கள் குற்றவாளியென சட்டரீதியாக நிரூபிக்கப்படாததால், அவர்களை குற்றவாளிகள்போல் நடத்த முடியாது.
எனினும், இலங்கையில் கடந்தகாலங்களில் பொலிஸ் காவலில் இருக்கும்போது பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 20 இற்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக மலையகத்தை சேர்ந்த இராஜகுமாரி என்ற பெண்ணும் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை மூடிமறைக்க பொலிஸார் முற்பட்டாலும், பின்னர் தாக்குதலால் நடந்த மரணம் அது என உறுதியானது.
அதேபோல பொலிஸாரின் சித்திரவதைகள் தாங்க முடியாமல் கைதானவர்கள் தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை கையாள்வதற்கான விசேட அறிவுறுத்தல்களை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பொலிஸ்மா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாத நிலையும் காணப்படுகின்றது. எனவே, அனைத்து விடயங்களையும் கருத்திக்கொண்டே வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, போதைப்பொருள் வியாபாரிகளால் பொலிஸாருக்கும் அச்சுறுத்தல் உள்ளது, இது பற்றியும் ஆராயப்படவுள்ளது.