முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு சட்டமா அதிபரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழையான தகவலாகும் – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நோயாளி ஒருவரை பார்வையிட இந்தியா செல்வதாகக்கூறி, வெளிநாடு செல்வதற்கு அவர் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தார் எனவும் நீதி அமைச்சர் தகவல் வெளியிட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த நீதி அமைச்சர்,
” முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா 2023 செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே பதவி விலகுவதாகவும், பதவி விலகல் கடிதத்தை ஏற்குமாறும் அவர் கூறியுள்ளார். ஆனால் உயிர் அச்சுறுத்தல் எப்படி ஏற்பட்டது, எவ்வாறு அழுத்தங்கள் ஏற்பட்டன என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.
உயிர் அச்சுறுத்தல் இருந்திருந்தால் பிடியாணை பிறப்பிப்பதற்கான அதிகாரம், பொலிஸ்மா அதிபருக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் உட்பட எல்லா அதிகாரமும் அவருக்கு இருந்துள்ளது. இது விடயத்தில் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.
செப்டம்பர் 23 ஆம் திகதி கடிதம் எழுதிவிட்டு 27 ஆம் திகதியே ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார். இக்காலப்பகுதியில் அவர் கொழும்பில் இருந்துள்ளார். தூதுவர்கள் இருவரை சந்தித்துள்ளார். தனது காரை விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள கையடக்க தொலைபேசி ஊடாகவே விமான ரிக்கெட் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல சந்தேகங்கள் உள்ளன. நீதி சேவை ஆணைக்குழுவும் விசாரணைகளை நடத்தியது. இதன்படி அதிகாரிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.” எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கமைய நீதிச்சேவைகள் ஆணைக்குழுக்களால் எமக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அதில் முதல் விடயமாக, தனக்கு உயிர் அச்சுறுத்தல், அழுத்தம் இருப்பது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய எவரிடமும் நீதிபதி ரி. சரவணராஜா எந்தவொரு விடயத்தையும் தெரியப்படுத்தவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 ஆவது விடயம், ரி. சரவணராஜா முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக வழங்கிய சில நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில், அவர் சார்பாக சட்டமா அதிபரின் ஒத்துழைப்பை பெறுவதற்காக 2023 செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிச்சேவை ஆணைக்குழு செலயகத்துடன் செயலாற்றியுள்ளார். அவ்வேளைகளில்கூட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் குறித்து அவர் எதையும் வெளிப்படுத்தவில்லை.
சட்டமா அதிபர் குறித்த நீதிபதியை அழைத்து, வழக்கு தீர்ப்புகளை மாற்றுமாறு அழுத்தம் கொடுத்தார் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தனது அலுவலகத்துக்கு இந்த நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு எந்தவொரு தேவைப்பாடும் இருக்கவில்லை. வருமாறு எந்தவொரு அறிவித்தலையும் விடுக்கவில்லை. இந்த நீதிபதி பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதால் ஆலோசனை பெற்றுள்ளார். நீதிபதி என்பவர் அரச உயர் அதிகாரி, அவர் சார்பில் ஆஜராகும் அதிகாரம் சட்டமா அதிபருக்கும் இருக்கின்றது. இதற்கு இணக்கமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதவிர சட்டாமா அதிபருக்கு இவருடன் எந்தவொரு கொடுக்கல் – வாங்கலும் கிடையாது. அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.
ரி. சரவணராஜா என்பவரால் 2023 ஆகஸ்ட் 29 ஆம் திகதி, 7 நாட்கள் வெளிநாடு செல்ல விடுமுறைகோரி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1 வரையான இந்த விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயிர் அச்சுறுத்தல் அழுத்தம் காரணமாக அல்ல, நோயாளி ஒருவரை பார்வையிட இந்தியா செல்வதாக கூறியே விடுமுறை பெற்றுள்ளார்.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நீதித்துறைமீது சிலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். குறித்த நீதிபதிக்கு எதிராக அவரது மனைவி நீதிச்சேவை ஆணைக்குழுவிடமும் முறையிட்டுள்ளார். அவரின் பதவி விலகதை நீதிச்சேவை ஆணைக்குழு இன்னும் ஏற்கவில்லை. நீதிச்சேவை ஆணைக்குழு உரிய முடிவை எடுக்கும். அதில் நாம் தலையிடுவதில்லை – எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.