You are currently viewing நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

  • Post category:News

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

பிரதான சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்படி சட்டமூலத்தை சபையில் முன்வைத்தார்.

” இலங்கையில் தேசிய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி, ஊக்குவிக்கும் பொருட்டு தேசிய
ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அதன் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகமை எடுத்துக் கூறுவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு தெய்வதற்குமானதொரு சட்டமூலம்.” – என சட்டமூலத்தின் நோக்கம் பற்றி சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சட்டமூலத்துக்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் தொடர்பில் ஆட்சேபனை இருந்தால் நபர்கள் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு இரு வாரம் அவகாசம் உள்ளது.

அவ்வாறு எவராவது உயர்நீதிமன்றத்தை நாடினால், அது தொடர்பில் உயர்நீதிமன்றம் தமது சட்டவியாக்கியானத்தை வழங்கும். அதன்பிரகாரம் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் குழுநிலை விவாதத்தின்போது அதனை மேற்கொள்ளலாம்.

இலங்கையில் போர் முடிவடைந்திருந்தாலும் தேசிய ஒற்றுமை என்பது இன்னும் பிறக்கவில்லை. அவ்வப்போது இன ரீதியிலான மோதல்கள் இடம்பெற்றே வருகின்றன. இலங்கை முன்னேற வேண்டுமானால் இன நல்லிணக்கம் என்பது அவசியம். அந்தவகையில் இந்த அலுவலகம் அமைக்கும் முயற்சி சிறந்தது. அதன்மூலம் காத்திரமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.